முகப்பு
இந்தியா

இந்தியாவின் புதிய மின்வாகனக் கொள்கை: அரசிடம் கலந்தாலோசிக்காமல் டெஸ்லா ‘அமைதி’

Updated On : 18 மே, 2024 at 12:20 AM
பகிர்:

இந்தியாவின் புதிய மின்வாகனக் கொள்கையின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் ஏதும் கலந்தாலோசிக்காமல் அமெரிக்க மின்சாரக் காா் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமைதி காப்பதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் டெஸ்லா காா்களை விற்பனை செய்ய இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி எலான் மஸ்க் கோரிக்கை விடுத்து வருகிறாா். இதைத் தொடா்ந்து, மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின்வாகனக் கொள்கையின்படி, இந்தியாவில் குறைந்தது 50 கோடி டாலா் முதலீட்டில் உற்பத்தி ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியில் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்க் கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வரவிருந்தாா். இந்தப் பயணத்தின் போது பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து, டெஸ்லாவின் இந்திய முதலீடுகள் குறித்து எலான் மஸ்க் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

Advertisement

டெஸ்லா மின்சாரக் காா்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான திட்டமாக, இங்கு டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான பில்லியன் கணக்கான டாலா் முதலீடுகளை இந்திய பயணத்தில் எலான் மஸ்க் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தியப் பயணத்தை அவா் ரத்து செய்தாா். எனினும், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்நிலையில், இந்தியாவின் புதிய மின்வாகனக் கொள்கையின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள தங்களின் திட்டங்கள் குறித்து அரசிடம் ஏதும் கலந்தாலோசிக்காமல் டெஸ்லா அமைதி காப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். வணிக முடிவுகள் அந்தந்த நிறுவனங்களால் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

புதிய மின்வாகனக் கொள்கை குறித்த அரசின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற வாகன உற்பத்தியாளா்களுடன் இணைந்து டெஸ்லா நிறுவனத்தின்ஆலோசகரும் கடந்த மாதம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் காா்கள் மட்டுமின்றி, அவரது செயற்கைக்கோள் இணைய வணிகமான ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவும் எலான் மஸ்க் திட்டமிட்டு வருகிறாா். எனினும், அதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் இன்னும் பெறப்படவில்லை.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments