முகப்பு
இந்தியா

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும், பாஜக 200 இடங்களைக்கூட தாண்டாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Updated On : 18 மே, 2024 at 12:33 PM
மம்தா பானர்ஜி
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் அல்லாத எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம், ஏனெனில் அது பாஜகவுக்கு பயனளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மாநில அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆரம்பாக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோகாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரை உருவாக்கியது நான்.

'இந்தியா' கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தனது பங்கை வகிக்கும். தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து நரேந்திர மோடி அரசை எதிர்த்துப் போராடுகிறோம்.

ஹவுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மாபெரும் கட்சிக் கொடியை கொண்டு சென்ற காட்சி.

பாஜகவால் 400 இடங்களைப் பெற முடியாது. 200 இடங்களைக் கூட தாண்டாமல் அக்கட்சி மண்ணைக் கவ்வும்.

மேற்கு வங்களத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பிற இடதுசாரி கட்சிகள் ஆகியவை நரேந்திர மோடிக்கு எதிராக இருக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸை இழிவுபடுத்துவதற்காகவே, வகுப்புவாத, ஜனநாயக விரோத பாஜகவுடன் கொள்கையற்ற உறவில் நுழைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் எனக்குத் தெரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது, கோகாட் மற்றும் சிஹார் போன்ற இடங்களில் இனப்படுகொலைகளைச் செய்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் மட்டுமே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பயங்கரவாதத்தைத் துணிச்சலாக எதிர்கொண்டேன்.

பாஜகவின் தலைக்கனமிக்க தலைவர்களான மோடியும், அமித் ஷாவும் "மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள்". மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதே அவர்களின் செயல்பாடுகளாகும். இது மாநில மக்களுக்கு ஒருபோதும் புரியாது.

சந்தேஷ்காளி பெண்கள் விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பாஜகவினர் கூறுகின்றனர். மோடி இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறார். அரசமைப்பில் உள்ள பன்முகத் தன்மை மதிப்புகள் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை மாற்றி, இந்தியாவின் பெயரை 'பாரத்' என்று மாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், 'இந்தியா' என்ற பெயரை உருவாக்கிய பிறகு அது அனைவராலும் உச்சரிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்" என்றார் மம்தா பானர்ஜி.

முழு கட்டுரையைப் படிக்க →