பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 20) தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் அமரவைப்பதே பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பொருத்தமான பதிலடி எனவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் (தனித் தொகுதி) பகுதியில் பாஜக வேட்பாளர் ஹேமந்த் சவ்ராவை ஆதரித்து அமித் ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். ஹேமந்த் சவ்ரா முன்னாள் பழங்குடியின நலத் துறை அமைச்சர் வித்னு சவ்ராவின் மகனாவார்.
அப்போது பேசிய அவர், ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். நமது அரசின் நிலையான முடிவு இது. இந்த உண்மையை உலகின் எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் செல்வாக்கிற்கு முன்பு இந்தியா கூட்டணி கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது. இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உறுதி செய்பவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இது. நிர்வாகத் திறமையின் மூலம் இவற்றை அளிக்கும் தலைவரை (நரேந்திர மோடி) நாம் பெற்றுள்ளோம். தலைவர்கள் அற்ற இந்தியா கூட்டணியில் அது இல்லை.
ராமர் கோயில், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு மோடி ஆட்சியின் தீர்வு காணப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ் பிரிவு) உத்தவ் தாக்கரே ஆகியோர் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு அழைப்பு விடுத்தும் அதனை புறக்கணித்தவர்கள்.
உண்மையான சிவசேனை யார்? போலியான சிவசேனை யார் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள். ஆட்சிப்பொறுப்புக்காக ஹிந்துத்துவா கொள்கையை விட்டுக்கொடுத்தவர் உத்தவ் தாக்கரே. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளுக்காக வாதடிய கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கைகோர்த்துள்ளார். இது அதிர்ச்சியானது. வெட்கக்கேடானது.
மூன்றாவது முறை மோடியை பிரதமராக ஆட்சி பொறுப்பில் அமர வைப்பதே பாகிஸ்தானுக்கு நாம் கொடுக்கும் பதிலடியாக இருக்கும்'' என அமித் ஷா பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.