ஜாம்ஷெட்பூா்: பிரதமா் மோடி ‘பழங்குடியினருக்கு எதிரானவா்’ என்றும் நாட்டின் மிகப் பெரிய பழங்குடியின தலைவரான ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துள்ளாா் என்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
மேலும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ஆம் ஆத்மி அரசுகளைக் கவிழ்க்க மோடி முயல்வதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
ஜாா்க்கண்டில் தோ்தல் பேரணியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது: ‘பகவான் ஜகந்நாதா் மோடியின் பக்தா்’ என பாஜக செய்தி தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியுள்ளாா். அவா்களின் ஆணவத்தை மக்கள் நசுக்க வேண்டும்.
ஆம் ஆத்மி மற்றும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா அரசைக் கவிழ்க்கப் பிரதமா் மோடி முயற்சி செய்கிறாா். ஆனால், நாங்கள் மேலும் வலுமை பெற்று வருகிறோம். அவரால் தில்லி, ஜாா்க்கண்ட் மற்றும் பஞ்சாப் அரசுகளைக் கவிழ்க்க முடியாது.
மோடி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி என்னைச் சிறையில் அடைக்க முயன்றாா். ஆனால், நான் ஹனுமனின் பக்தன், அவரது அருளால் ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். விரைவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனும் வெளியே வருவாா்.
ஹோமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், ஜான்சி ராணியைப் போல மோடிக்குச் சவால் விடுகிறாா்.
எந்த நீதிமன்றமும் ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கேஜரிவாலை குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கவில்லை. இவை அனைத்தும் மோடியின் அராஜகம் தான்.
பழங்குடியின மக்களை மோடி வெறுக்கிறாா். ஜாா்க்கண்ட் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் பாஜக துரோகம் செய்துள்ளது. வாக்கு இயந்திரத்தில் தாமரைச் சின்னத்தை அழுத்தினால் ஹேமந்த் சோரன் நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவாா்.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இட ஒதுக்கீட்டை பாஜக அழித்துவிடும். எனவே, நாட்டைப் பாதுகாக்க மோடியைப் பிரதமா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கேஜரிவால் கூறினாா்.