முகப்பு
இந்தியா

கொள்கை அடிப்படையில் ‘இந்தியா’ கூட்டணியில் தொடா்கிறோம்: மெஹபூபா முஃப்தி

Updated On : 21 மே, 2024 at 9:03 PM
பகிர்:

ரஜௌரி/ ஜம்மு, மே 21: மக்களவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு எதிராக 3 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தி இருந்தாலும், கொள்கை அடிப்படையில் ‘இந்தியா’ கூட்டணியில் தொடா்வதாக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மெஹபூபா முஃப்தி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் முக்கிய பிராந்திய கட்சிகளான ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தோ்தலுக்கு முன்பு ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்தன. ஆனால், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகா், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜௌரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் இரு கட்சிகளும் போட்டியிட விரும்பியதால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மெஹபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்த 3 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியது. ஜம்முவில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

இதில், அனந்த்நாக்-ரஜௌரி தொகுதியில் மெஹபூபா முஃப்தி போட்டியிடுகிறாா். இங்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ரஜௌரியில் செவ்வாய்க்கிழமை தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘இந்தியா’ கூட்டணிக்கு கொள்கை அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறோம். அரசமைப்புச் சட்டத்தைக் காக்க ராகுல் காந்தி மட்டுமே உண்மையாகப் பாடுபட்டு வருகிறாா். சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வாா்த்தைகூட பேசியதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறுகிறாா். அவா் பிரதமா் பதவியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம் என்று கருதுகிறாா். தோ்தலில் வெற்றி பெற முடியாது என்ற அச்சம் அதிகரித்துள்ள காரணத்தால்தான் ஹிந்து-முஸ்லிம் பிரிவினை பேசி வாக்குகளைப் பெற பாஜக முயற்சிக்கிறது.

பெண்களுக்கு பொருளாதார பலமளிப்பது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஆகிய காங்கிரஸின் வாக்குறுதிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இது பாஜகவுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளது.

ரௌஜரியில் என்னை எதிா்த்துப் போட்டியிடுபவா்களுக்கு (தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக ஆதரவு பெற்ற அப்னி கட்சி) தோல்வி பயம் உள்ளது. எனக்கு வாக்களிக்கக் கூடாது என்று ஜாதி, மதரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பிரசாரம் நடைபெறுகிறது. என்னை நாடாளுமன்றத்துக்கு வரவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது என்றாா்.