மகாராஷ்டிர மாநிலம் புணேவில், குடிபோதையில் கார் ஓட்டி சிறுவன் ஏற்படுத்திய விபத்தில், இரண்டு பேர் பலியான நிலையில், குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு சிறுவனை வயது வந்தவராகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒரு வழக்கில், குற்றவாளி சிறுவனாக இருக்கும்போது, அவரை வயது வந்தவராகக் கருத முடியுமா? என்றும், இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.
மதுபோதையில், மிகவும் குறுகிய சாலையில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த சிறுவன் காரை இயக்கியிருக்கிறார். குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காருக்கு அகர்வால், சாலை வரி கட்டவில்லை, சிறுவனிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை.
இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலம் புணேவில், விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் போதையில் காா் ஓட்டியது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த புணே காவல்துறை ஆணையா் அமிதேஷ் குமாா், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு சிறுவனை வயது வந்தவராக கருதியும், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினாா்.
சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் திருத்த மசோதா கடந்த 2021ஆம் ஆண்டுநிறைவேற்றப்பட்டது. 16 - 18 வயதுக்குள்பட்ட சட்டத்துடன் முரண்படும் சிறார்களை, கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு கைதானால் விசாரணைக்கு உள்படுத்த அனுமதிக்கிறது இந்த சட்டம்.
சிறார் நீதி சட்டம் 2015-ன் பிரிவு 15ன்படி, சிறார், வயது வந்தவராக இருக்க முடியுமா என்று மதிப்பிடுகிறது. ஒரு சிறார் என்பவர் செய்யும் குற்றங்களை மூன்றாக வரையறை செய்கிறார்கள் - சிறு குற்றங்கள், மோசமான குற்றங்கள், மிக மோசமான குற்றங்கள் என.
எனவே 2015ஆம் சட்டத்தின்படி, ஒரு சிறார் மிக மோசமான குற்றம் செய்து அவருக்கு வயது 16 - 18 வயது வரை இருந்தால், அவரை வயது வந்தவராகக் கருதலாம். சட்டத்துடன் முரண்படும் குழந்தை, குற்றம் நடந்த நேரம், அந்த சிறாரின் வயது போன்றவற்றை அடிப்படையாக வைத்து, அந்த சிறாரை குழந்தையா அல்லது வயது வந்தவராகக் கருதலாமா என்பதை முடிவு செய்கிறது.
சட்டப்பிரிவு 15ன்படி, ஒருவேளை, சிறார் மிக மோசமான குற்றத்தில் ஈடுபட்டு கைதானால், சிறார் நீதிச் சட்டம், விசாரணை அமைப்புக்கு, சிறாரின் மன மற்றும் உடலளவில் இந்தக் குற்றத்தை செய்ய எந்த அளவுக்கு திறன்பெற்றிருந்தார், குற்றச்செயலின் விபரீதத்தை அறிந்திருந்தாரா என்பதையெல்லாம் கணக்கிட்டு, அவரை வயது வந்தவராகக் கருத வாய்ப்பளிக்கிறது.
அடுத்து, சட்டப்பிரிவு 18(3)ன்படி, முதற்கட்ட ஆய்வுகளில், விசாரணை அமைப்பானது, சிறாரை வயது வந்தவராகக் கருத முடிவெடுக்கும்பட்சத்தில் இந்த வழக்கு விசாரணையானது குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில் அதிகபட்ச தண்டனை என்ன?
மிக மோசமான குற்றங்கள், குறிப்பாக பாலியல் வன்கொடுமை, கொடூர வன்கொடுமைச் சம்பவங்கள் போன்றவற்றுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சட்ட திருத்தம் ஏன் கொண்டுவரப்பட்டது?
நாட்டையே உலுக்கிய தில்லி பலாத்கார சம்பவமே இதற்கு உதாரணம். கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புது தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறார்.
இந்த குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறாரை தண்டிக்கக் கூடிய வயதை உயர்த்துமாறு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது. தொடர்ந்து ஒரு சிறாரின் வயது 18லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குழந்தை உரிமைகள் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனை ஆராய அமைக்கப்பட்ட ஜேஎஸ் வெர்மா ஆணையமும், சிறாரின் வயதை 16 ஆக குறைக்க பரிந்துரைக்கவில்லை. இதைத் தொடர்ந்தே 2015ஆம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தில்லியில் துணை மருத்துவக் கல்லூரி மாணவி வழக்கில், 6 குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் உயிரிழக்க, நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறார் குற்றவாளி 3 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்தார்.
இதுபோன்று வழக்கு நடந்துள்ளதா?
கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயதுடைய இரண்டு சிறார்களை வயது வந்தவர்களாக விசாரிக்குமாறு தில்லி நீதிமன்றம் மிக அரிதான உத்தரவை பிறப்பித்தது. இவ்விரு சிறார்களுக்கும் சிறார் நீதி சட்டப் பிரிவு மற்றும் விசாரணை குறித்து தெரிந்திருக்கிறது. இது ஒரு மிகத் துல்லியமாக திட்டமிட்ட கொலை, எனவே, சிறார்களாக இருப்பதால் தண்டனை குறைவாக இருக்கும் என்பதால், வயது வந்தவர்களை போல சிந்தித்து கொலை செய்திருக்கிறார்கள். எனவே, இவர்களை வயது வந்தவர்களாகக் கருதி விசாரணை நடத்த அனுமதி அளித்திருந்தது.
2022ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் சிறார்கள். ஆனால், அவர்கள் குற்றத்தை வயது வந்தவர்கள் போல திட்டமிட்டு நடத்தியிருப்பத விசாரணையில் தெரிய வந்திருப்பதால், வயது வந்தவர்களாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை ஆணையர் அறிவித்திருந்தார்.
இதேப்போன்று 2019ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், 17 வயது சிறாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை ஹைதராபாத் உள்ளூர் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
2017ஆம் ஆண்டு குர்கானில், 7 வயது மாணவனைக் கொலை செய்த 9ஆம் வகுப்பு மாணவனை வயது வந்தவராகக் கருதி விசாரணை நடத்த சிறார் நீதி வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மகாராஷ்டிர சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் சிறுவன் ஓட்டிய காா் மோதி இருவா் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதற்கு நண்பர்களுக்கு மது விருந்தளித்ததும், வெறும் 90 நிமிடத்தில் 2 மதுபார்களுக்குச் சென்று சிறுவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மது குடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
மது குடித்த ஒரு சில மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி இரண்டு உயிர்கள் பலியாகக் காரணமாகியிருக்கிறார் அந்த சிறுவன்.
புணே, கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டியுள்ளாா்.
அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த விபத்து தொடா்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சிறுவனை காா் ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோரின் அலட்சியம் மக்களின் விமா்சனத்துக்குள்ளானது.மேலும், சிறுவனை கட்டாய ஆலோசனை மற்றும் போதைமீட்பு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும் சாலைப் பாதுகாப்பு குறித்து கட்டுரை எழுதச் சொல்லியும் கைது செய்யப்பட்ட 15 மணிநேரத்தில் சிறாா் நீதி ஆணையம் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது, மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதையொட்டி, அப்பகுதியிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நண்பா்களுடன் இணைந்து சிறுவன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் போதையில் காா் ஓட்டியது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த புணே காவல்துறை ஆணையா் அமிதேஷ் குமாா், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு சிறுவனை வயது வந்தவராக கருதியும், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் மதுகுடிப்பதற்தான சட்டபூா்வ அங்கீகார வயது 25-ஆகும். அந்தவகையில், 17 வயது சிறுவனுக்கு மதுவிற்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு மது கூடங்களின் உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.