பிரதமராவதற்கு தகுதியானவர்கள் இந்தியா கூட்டணியில் இல்லை: அமித் ஷா
மேற்கு வங்க மாநிலம் கட்டல் மற்றும் புருலியா ஆகிய தொகுதிகளில் அமைச்சர் அமித் ஷா பிரசாரம்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவி வகிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கட்டல் மற்றும் புருலியா ஆகிய தொகுதிகளில் அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது இந்தியா கூட்டணி தலைவர்களை விமர்சித்து அவர் பேசியதாவது, ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். அதனை விட்டுக்கொடுக்கமாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக இந்தியா கூட்டணி போராடாது. பாகிஸ்தானிடம் குண்டுகள் இருப்பதால், மரியாதை கொடுக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால் நாங்கள் அஞ்சமாட்டோம். நமது உரிமையை அவர்களிடமிருந்து மீட்போம்.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் தலைவர் பொறுப்பை ஏற்கப்போவது யார்? அந்தக் கூட்டணியில் தகுதியான தலைவர்கள் இல்லை. அப்படி வந்தாலும் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள் வருவார்கள். பிரதமரை சுழற்சி முறையில் மாற்றுவார்கள்.
சுழற்சி முறையில் மாறும் பிரதமர்கள் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவார்களா? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தது என்பதை நாம் அறிவோம்.
நரேந்திர மோடி, காஷ்மீரில் தீவிரவாதத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவந்தார் என்பதையும் நாம் அறிவோம்.
தங்கள் சொந்த குடும்பங்களை மேம்படுத்துவதிலும் முன்னேற்றுவதிலும் மட்டுமே இந்தியா கூட்டணி கவனம் செலுத்துகிறது.
சரத் பவார் தனது மகளை முதல்வராக்க முயற்சிக்கிறார். மம்தா பானர்ஜி தனது மருமகனை முதல்வராக்க துடிக்கிறார். மு.க. ஸ்டாலின் அவரின் மகனை அடுத்த வாரிசாக உருவாக்குகிறார். சோனியா காந்தி ராகுலை பிரதமராக்க நினைக்கிறார். ஆனால் மறுபுறம் பிரதமர் மோடி நாட்டு மக்களையே தம் குடும்பமாகக் கருதுகிறார்'' எனப் பேசினார் அமித் ஷா