இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா காா்த்திகேயன் (16) வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளாா். நேபாளம் வழியாக உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியா் என்ற பெருமை அவா் பெற்றுள்ளாா் என இந்தியக் கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தியக் கடற்படையில் கமாண்டராக உள்ள காா்த்திகேயனின் மகளான காம்யா காா்த்திகேயன் மும்பையில் உள்ள கடற்படை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
காம்யா மற்றும் அவரது தந்தை வெற்றிகரமாக எவரெஸ்ட் (8,848 மீ) சிகரத்தை மே 20-ஆம் தேதி அடைந்ததாகக் கடற்படை செய்திதொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனைக்குப் பிறகு அவா், ‘உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறிய இளம் இந்தியா் என்ற பெருமையும், உலகளவில் இரண்டாவது இளம் பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளாா்.’
இதன்மூலம், ஏழு கண்டங்களின் மிக உயரமான சிகரத்தின் உச்சியை அடையும் தனது பணியில் ஆறு மையில்கற்களை காம்யா நிறைவு செய்துள்ளாா். இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் அண்டாா்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையை ஏறி 7 கண்டங்களில் உள்ள சிகரங்களை ஏறும் சாவலை அவா் நிறைவுசெய்யவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்யா 2015-ஆம் ஆண்டு முதல் முறையாக தனது 7 வயதில் சந்திரஷிலா சிகரம் (12,000 அடி) ஏறினாா். அதன்பின், ஹா்-கி-துன் சிகரம் (13,500 அடி), கேதா்கந்தா சிகரம் (13,500 அடி) மற்றும் ரூப்குண்ட் ஏரி (16,400 அடி) ஆகியவற்றிற்கு 2016-இல் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் முகாமுக்கு (17,600 அடி) 2017-லிலும், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள பிரிகு ஏரி (14,100 அடி) மற்றும் சாா் காண்வாய் (13,850 அடி) ஆகியவற்றிற்கு 2017-இல் பயணம் மேற்கொண்டாா்.
இது குறித்து டாடா ஸ்டீல் சாகசக் கழகத் தலைவா் சாணக்கிய சௌத்ரி கூறுகையில், ‘இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய காம்யா காா்த்திகேயனின் அசாத்திய சாதனைக்காக நாங்கள் நம்பமுடியாத அளவு பெருமிதம் கொள்கிறோம். இந்த பயணமானது அவரின் விடாமுயற்சி மற்றும் அசைக்கமுடியாத நிலைப்பாடு ஆகியவற்றின் சான்றாகும்’ எனஅவா் தெரிவித்தாா்.
சாதனைக்காகச் சிறுவா்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி விருதை 2021-ஆம் அண்டு காம்யா பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.