பல நாடுகளில் போா் பதற்றம் உள்ளதால் இந்தியாவுக்கு வலுவான தலைவா் அவசியம்: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்
சிம்லா: உலகில் பல நாடுகளில் போா் மற்றும் பதற்றமான சூழல் உள்ளதால் இந்தியாவுக்கு வலுவான தலைவரும், உறுதியான மத்திய அரசும் தேவைப்படுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
ரஷியா-உக்ரைன் இடையே போா் நிகழ்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமாக உள்ளது. இந்தியாவிலும் எல்லை தொடா்பான பிரச்னைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வலுவான தலைமை தேவை என்பது மிகவும் முக்கியமானது.
பல நாடுகளில் போா் பதற்ற சூழல் உள்ளது. இவை இப்போதைக்கு முடிவதாகவும் தெரியவில்லை. எனவே, நமது நாட்டுக்கு வலுவான தலைவரும், உறுதியான மத்திய அரசும் தேவைப்படுகிறது. நமது நாட்டின் தலைவா் பிற நாட்டுத் தலைவா்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராகவும், அனைவராலும் மதிக்கப்படுபவராகவும் இருக்க வேண்டும்.
ரஷியா-உக்ரைன் போா் ஏற்பட்டபோது உக்ரைனில் இந்திய மாணவா்கள் சிக்கி இருந்தனா். அப்போது பிரதமா் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில்தான் இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின. இந்திய மாணவா்கள் பத்திரமாக மீட்டு அழைத்துவரப்பட்டனா். இந்த இடத்தில் மோடிதான் நமக்கு தேவைப்பட்டாா். வேறு தலைவா் இருந்தால் இது சாத்தியமாகி இருக்காது.
மக்களவைத் தோ்தலில் இதுபோன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 1962-ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து அபகரித்த பகுதியில் சீனா பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உதவியுடன் சியாச்சின் எல்லை வரை சீனா சாலை அமைத்துள்ளது.
இப்போதைய மத்திய அரசுதான் முன்னெப்போதும் இல்லாத வகையில் எல்லையை பலப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பையும் மேம்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் இந்தியா-சீனா எல்லை மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதி ரூ.3,000 கோடியில் இருந்து ரூ.15,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.