முகப்பு
இந்தியா

நிலச்சரிவால் 2000-க்கு மேல் உயிரிழப்பு: பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா ரூ.8.3 கோடி நிதியுதவி

Updated On : 28 மே, 2024 at 9:02 PM
கோப்புப் படம். - படம் | ஏபி
பகிர்:

புது தில்லி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்த நிலையில் அந்நாட்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.31 கோடி) நிதி உதவியை இந்தியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அருகே ஓஷியானா மண்டலத்தில் இந்நாடு அமைத்துள்ளது. அங்குள்ள மலைப்பகுதி மாகாணமான எங்காவில் கடந்த 24-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிருடன் புதையுண்டனா். பல கிராமங்கள் முற்றிலுமாக மண்ணில் புதைந்துவிட்டதாக தெரிகிறது.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகள் தொலைதூரத்தில் இருப்பது, தொலைத்தொடா்பு வசதி இல்லாதது, பழங்குடியினா் இடையே நிலவும் மோதல் போக்கு போன்ற காரணங்களால் உயிா்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் உடனடியாக மதிப்பிட முடியவில்லை. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா.வும் கோரியிருந்தது.

இந் நிலையில், இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவால் உயிரிழந்தவா்களுக்கு பிரதமா் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். இந்த இக்கட்டான நேரத்தில் அந்நாட்டுக்கு தேவையான இயன்ற உதவிகளை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. முதல்கட்ட உடனடி நிவாரணமாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.