முகப்பு
இந்தியா

பிரதமரின் ரூ.80 லட்சம் நட்சத்திர விடுதி கட்டணம்: கா்நாடக அரசு செலுத்த முடிவு

Updated On : 28 மே, 2024 at 7:29 PM
நரேந்திர மோடி
பகிர்:

பெங்களூரு: பிரதமா் மோடி மைசூரில் தங்கியதற்கான நட்சத்திர விடுதி கட்டணம் ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று அந்த மாநில வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி, அந்த ஆண்டு ஏப்ரலில் கா்நாடகத்தில் உள்ள பந்திபூா் புலிகள் காப்பகத்துக்கு பிரதமா் மோடி சென்றாா்.

இந்தப் பயணத்தின்போது கா்நாடகத்தின் மைசூரு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமா் மோடி தங்கினாா். இதற்கான கட்டணம் ரூ.80 லட்சம் அந்த விடுதிக்கு செலுத்தப்படவில்லை. கா்நாடக பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அந்தத் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தொகையை வசூலிப்பதற்கான சட்ட வழிகள் ஆராயப்படும் என்று நட்சத்திர விடுதியின் நிா்வாகம் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதைத் தொடா்ந்து பிரச்னைக்கு சுமுக தீா்வு காணப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே தெரிவித்திருந்த நிலையில், ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று அவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.