அரிதான தீர்ப்பு: மும்பை அழகு நிபுணர் கொலையில் இருவருக்கு தண்டனை
மும்பை அழகுக் கலை நிபுணர் கொலையில் இருவருக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், அரிதான தீர்ப்பாக மாறியிருக்கிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த அழகு நிபுணர் கொலை வழக்கில், அவரது உடல் கிடைக்காத நிலையிலும், குற்றவாளிகள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான தீர்ப்பாக அமைந்துள்ளது.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 2018ஆம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் கீர்த்தி வியாஸ் (28), தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனார். மீண்டும் அவர் கிடைக்கவேயில்லை. அவரது உடலும் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான், விசாரணை நீதிமன்றம், அவருடன் பணியாற்றிய சித்தேஷ் தம்ஹன்கர், கவிதா சித்வானி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோருடன்தான் கடைசியாக கீர்த்தி இருந்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அவர்கள் இருவரும் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கொலை வழக்கில், பலியானவரின் உடல்கிடைக்காமல், தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கை மிகவும் அரிதான வழக்காக மாற்றியிருக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமான தண்டனை விவரம் இன்று வெளியாகவிருக்கிறது.
2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி கிராண்ட் சாலைப் பகுதியில் வசித்து வந்த கீர்த்தி மாயாமானார். மே 5ஆம் தேதி குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும், கீர்த்தியின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு நீர்நிலையில் வீசியதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவரது உடலை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதாவது ஒரே இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருமணமான சித்வானி என்ற பெண்ணுடன் அங்கே பணியாற்றி வந்த சித்தேஷ் நெருங்கிப் பழகியிருக்கிறார். மேலும், சித்தேஷ் பணியில் சரியாக இல்லாததால், அவரை வேலையை விட்டு வெளியேறும்படி கீர்த்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதற்கு பழிவாங்கவே இந்தக் கொலை நடந்திருக்கிறது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடல் கிடைக்காத நிலையில், மிகச் சரியான ஆதாரங்களையும், சூழ்நிலைகளையும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும், தடயவியல் ஆதாரங்களையும் கொண்டுவந்து நீதிமன்றத்தில் வைத்ததற்காக விசாரணை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்திருந்தது.
நோட்டிஸில் கூறப்பட்டிருந்த காலக்கெடு முடியும் நாளில் இந்த கொலை நடந்திருக்கிறது போன்ற பல்வேறு ஆதாரங்கள் தான் இந்த கொலை வழக்கில் அரிதான தீர்ப்பை வழங்க உதவியிருக்கிறது.