பாலியல் விடியோக்கள்! பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் தடயவியல், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை!
பிரஜ்வல் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்பட பல்வேறு பொருள்களில் இருந்த கைரேகைகள் பதிவு.
பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் தடயவியல் நிபுணர்கள், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்தனர்.
ஆர்சி நகரில் உள்ள எம்.பி.யும், முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் பேரனுமான பிரஜ்வலின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை இந்த சோதனை நடைபெற்றது.
ஹாசன் நகர் காவல்துறையின் பாதுகாப்புடன் சுமார் 10 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் வீட்டின் கட்டில், மெத்தை உள்ளிட்டவற்றில் இருந்த கைரேகைகளை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
நாளை மறுநாள்(மே 31) ஜெர்மனியில் இருந்து திரும்புவதாகவும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா சமீபத்தில் விடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் பிரஜ்வலை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
விசாரணையை தொடர்ந்து, உடனடியாக பிரஜ்வல் கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
பிரஜ்வால், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக 2019-இல் பிரஜ்வால் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். இவர் கட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்களிக்கும் நாளில் பிரஜ்வாலின் சில புகைப்படங்களும் விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின.
பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகங்களின் கவனம் அதிகரித்ததால், ஏப்ரல் 27 அன்று, கர்நாடக அரசு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா டிப்ளமேட்டிக் விசா மூலம் ஜெர்மனி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.