லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இஸ்ரோவின் விண்வெளிச் சூழல் ஆய்வுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இஸ்ரோ, ஐஐடி மும்பை, லடாக் பல்கலைக்கழகம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கூட்டமைப்பு, மனித விண்வெளிப் பயண மையம் மற்றும் ஏஏகேஏ ஸ்பேஸ் ஸ்டுடியோ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தியாவின் முதல் விண்வெளிச் சூழல் ஆய்வுத் திட்டம் லடாக்கின் லே பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் வாழ்க்கையை உருவகப்படுத்தவும், அங்கு அடிப்படை நிலையங்களை அமைப்பதில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்’ என குறிப்பிட்டிருந்தது.