முகப்பு
இந்தியா

கன்னட இயக்குநர் குருபிரசாத் தற்கொலை!

தூக்கில் தொங்கிய நிலையில் கன்னட இயக்குநர் குருபிரசாத்தின் சிதைந்த உடல் மீட்பு

Updated On : 3 நவம்பர், 2024 at 9:46 AM
குருபிரசாத்
பகிர்:

பெங்களூருவில் தூக்கில் தொங்கிய நிலையில் கன்னட இயக்குநர் குருபிரசாத்தின் சிதைந்த உடலை மீட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006 ஆம் ஆண்டில் மாதா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் எட்டேலு மஞ்சுநாதா திரைப்படம் 2009 ஆம் ஆண்டின் கர்நாடக மாநில திரைப்பட விருதினைப் பெற்றது. ஆனால், 2024 ஆம் ஆண்டில் வெளியான ரங்கநாயக்கா படம் வசூலில் பெரும் சரிவைக் கண்டது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் தன்னிடம் புத்தகங்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தவில்லை என்று குருபிரசாத் மீது புத்தகக் கடை நடத்தும் லட்சுமிகாந்த் புகார் அளித்திருந்தார். புகாரில் லட்சுமிகாந்த் தெரிவித்திருந்ததாவது, `குருபிரசாத் தனது மாணவர்களுக்காக 100 புத்தகங்களுக்கு தள்ளுபடி கோரினார்; தலா 75 புத்தகங்கள் கொண்ட ஐந்து தொகுப்புகளை வாங்கினார். ஆனால், அதற்கான தொகையை மொத்தம் ரூ. 65,000 பணம் செலுத்தவில்லை. தகவல்தொடர்புகளைத் தவிர்த்து அவரது குடியிருப்பு முகவரியையும் மாற்றிவிட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பெங்களூருவில் மதநாயக்கனஹள்ளியில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், ஞாயிற்றுக்கிழமையில் (நவ. 3) காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்குள் சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது, வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் குருபிரசாத்தின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரங்கநாயக்கா படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நிதிச் சுமை, மன அழுத்தம் காரணமாக குருபிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, நவ. 2 ஆம் தேதியில் அவருக்கு 52 ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →