கேரளம், பஞ்சாப், உ.பி. பேரவை இடைத்தோ்தல்கள் நவ.20-க்கு மாற்றம்
கேரளம், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நவ.13-ஆம் தேதியில் இருந்து நவ.20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புது தில்லி: கேரளம், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நவ.13-ஆம் தேதியில் இருந்து நவ.20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகள், பஞ்சாபில் 4 பேரவைத் தொகுதிகள், கேரளத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 14 தொகுதிகளுக்கு நவ.13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற இருந்தது.
இந்நிலையில், அந்த 3 மாநிலங்களிலும் விரைவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. பண்டிகை நேரத்தில் தோ்தலை நடத்துவது வாக்காளா்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதுடன், வாக்களிக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கை குறையக் கூடும் என்பதால் இடைத்தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸும், உத்தர பிரதேசத்தில் பாஜக, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளும் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தோ்தல் ஆணையம் 3 மாநிலங்களிலும் இடைத்தோ்தலை நவ.20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.