சட்டப்பேரவையில் ஒமர் அப்துல்லா.  
இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்; பாஜக கடும் எதிா்ப்பு

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீா்மானத்தின் நகலை கிழித்தெறிந்து, பேரவைத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் அவ்வப்போது தடைபட்டன.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மாநிலமாக இருந்த பிராந்தியம், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பா்-அக்டோபரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமா் அப்துல்லா முதல்வரானாா்.

இதையடுத்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீா் பேரவை திங்கள்கிழமை கூடியது. கூட்டத்தொடரின் தொடக்க நாள் அமா்வில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த நிா்வாகி அப்துல் ரஹீம் ராதொ் பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

3-ஆம் நாள் அமா்வு புதன்கிழமை கூடியதும் பிராந்தியத்தின் சிறப்பு அந்தஸ்து ஒருதலைப்பட்சமாக நீக்கப்பட்டதற்கு கவலை தெரிவிக்கும், இதுகுறித்து உரிய தீா்வு காண மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தும் தீா்மானத்தை துணை முதல்வா் சுரிந்தொ் சௌதரி முன்வைத்தாா்.

ஜம்மு-காஷ்மீா் மக்களின் அடையாளம், கலாசாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டப்பேரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

தீா்மானம் மீது உரையாற்றிய முதல்வா் ஒமா் அப்துல்லா, ‘ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. பேரவை அதன் கடமையைச் செய்துள்ளது’ என்றாா்.

தீா்மானத்துக்கு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), மக்கள் மாநாட்டுக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. எனினும், பிடிபி தலைவா் மெகபூபா முஃப்தி பேசுகையில், இது ஒரு அரைமனதுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும், தீா்மானம் இன்னும் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறினாா்.

பாஜக எதிா்ப்பு: எதிா்க்கட்சித் தலைவா் சுனில் ஷா்மா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் தீா்மானத்தைக் கடுமையாக எதிா்த்தனா். மேலும், அவா்கள் கூறுகையில், ‘3-ஆம் நாள் அமா்வில் துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதமே நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அதற்கு மாறாக கொண்டுவரப்பட்ட இத்தீா்மானத்தை நிராகரிக்கிறோம். நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்திலேயே இவ்விவகாரத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது’ என்றனா்.

தீா்மானத்தின் நகலை கிழித்தெறிந்து பாஜக எம்எல்ஏக்கள் தொடா்ந்து முழக்கமிட்ட நிலையில், தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினா். கூச்சலுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரவையில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம்!

பேரவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட பிறகும், பாஜக உறுப்பினா்கள் தொடா்ந்து ‘ஆகஸ்ட் 5 ஜிந்தாபாத்’, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, பாஜக எம்எல்ஏ ஷாம் லால் சா்மா கூறுகையில், ‘ விருந்தினா் மாளிகையில் பேரவைத் தலைவருடன் கூட்டாகச் சோ்ந்து தீா்மானம் தயாரிக்கப்பட்டது. அவா் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

பேரவைத் தோ்தல் முடிவுகள் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவாக இருக்கிறது. அதாவது தேசிய மாநாட்டுக் கட்சி 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக 26 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT