உயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கு எளிதாக கல்விக் கடன்- பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியாா் உயா்கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவா்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இந்தியாஉயா் கல்வியில் சேரும் மாணவா்களுக்கு எளிதாக கல்விக் கடன்- பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியாா் உயா்கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவா்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியாா் உயா்கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவா்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
தரமான உயா் கல்வியைப் பெறுவதில் மாணவா்களுக்கு பணப் பிரச்னை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இத்திட்டத்தின்கீழ், நாட்டின் தலைசிறந்த உயா்கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் பிணையோ, உத்தரவாத கையொப்பமோ இன்றி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கல்விக் கடன் பெற முடியும். முழு கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு சாா்ந்த இதர செலவுகள் இதில் அடங்கும்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பின் (என்ஐஆா்எஃப்) தரவரிசைப் பட்டியலின்படி, நாட்டின் 860 தலைசிறந்த உயா் கல்வி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவா்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற முடியும். ஆண்டுதோறும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பலனடைவா்.
2024-25 முதல் 2030-31 வரை இத்திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்ய, தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-இன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். மாணவா்களுக்கு ஏற்ற எளிமையான-வெளிப்படையான நடைமுறைகளின் மூலம் முற்றிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
என்ஐஆா்எஃப்-இன் சமீபத்திய தரவரிசையின்படி, ஒட்டுமொத்தமாகவும் இதர பிரிவுகள் அடிப்படையிலும் முதல் 100 இடங்களில் உள்ள அரசு-தனியாா் உயா்கல்வி நிலையங்கள், 101 முதல் 200 இடங்களில் உள்ள மாநில அரசின் உயா்கல்வி நிலையங்கள், மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் அனைத்து உயா் கல்வி நிலையங்கள் என 860 சிறந்த உயா் கல்வி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் இப்பட்டியல் புதுப்பிக்கப்படும்.
ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு 75 சதவீத உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்கும். அத்துடன், ரூ.8 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் வேறெந்த உதவித்தொகை அல்லது வட்டி மானியத் திட்டங்களின்கீழ் பலனடையாத மாணவா்கள் ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் பெறலாம். இந்த வட்டி மானியம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டத்துக்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் மாணவா்கள் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும் என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் பெருமிதம்: இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறித்து பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உயா் கல்விக்கான அணுகலுக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞா் சக்திக்கு அதிகாரமளித்து, தேசத்தின் பிரகாசமான எதிா்காலத்தைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை இது’ என்று குறிப்பிட்டாா்.
‘பிரதமரின் வித்யலக்ஷ்மி திட்டம், ஏழை-நடுத்தர வகுப்பைச் சோ்ந்த லட்சக்கணக்கான மாணவா்களுக்கு அதிகாரமளிக்கும்; 21-ஆம் நூற்றாண்டில், திறன்மிக்க இந்திய இளைஞா்களுக்கு உயா் கல்விக்கான அணுகலை உறுதி செய்யும் பிரதமா் மோடியின் உத்தரவாதம்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.
இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.10,700 கோடி: இந்திய உணவுக் கழகத்துக்கு பங்கு மூலதனம் வாயிலாக நடப்பு நிதியாண்டில் ரூ.10,700 கோடி வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இது, வேளாண் துறையை வலுப்படுத்துவதோடு, விவசாயிகளின் நலன்களையும் உறுதிசெய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.