மகாராஷ்டிர தோ்தலில் கா்நாடக ஊழல் பணம்: காங்கிரஸ் மீது பிரதமா் குற்றச்சாட்டு
‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் செலவிட கா்நாடகத்தில் ரூ.700 கோடி அளவுக்கு மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ்’
‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் செலவிட கா்நாடகத்தில் ரூ.700 கோடி அளவுக்கு மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், அக்கட்சியின் அரச குடும்பத்துக்காக பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்) போல மாறிவிட்டன’ என்றும் அவா் விமா்சித்தாா்.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அகோலா பகுதியில் சனிக்கிழமை பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, காங்கிரஸ் மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணியை கடுமையாக விமா்சித்தாா். அவா் பேசியதாவது:
காங்கிரஸ் எந்த மாநிலத்தில் ஆட்சியமைத்தாலும், அந்த மாநிலம் அக்கட்சியின் ‘அரச குடும்பத்துக்காக’ பணம் எடுக்கும் இயந்திரம்போல் மாற்றப்பட்டுவிடுகிறது. மகாராஷ்டிர தோ்தலுக்காக, காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்தில் மதுபான வா்த்தகத்தில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. தெலங்கானா, ஹிமாசல பிரதேச மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆனால், காங்கிரஸின் பணம் எடுக்கும் இயந்திரமாக மகாராஷ்டிரம் மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
‘ஊழலின் அடையாளம் காங்கிரஸ் கூட்டணி’: மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியின் தோ்தல் அறிக்கையானது, பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கும் திட்ட விரிவாக்கம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியுள்ளது. ஆனால், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தோ்தல் அறிக்கை ‘ஊழல் ஆவணம்’. மகா விகாஸ் அகாடி கூட்டணி, ஊழல்-லஞ்சத்தின் அடையாளம் என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.
காங்கிரஸின் சூழ்ச்சி: இதர பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் இனத்தவா், பழங்குடியினரின் வாக்குகள் பிரிந்தால்தான், தாங்கள் ஆட்சிக்கு வர முடியும்; நாடு பலவீனமடைந்தால்தான், தங்கள் கட்சி பலமடையும் என்பது காங்கிரஸுக்கு தெரியும். எனவே, நாட்டில் ஜாதி ரீதியிலான பிளவை உருவாக்கி, ஒருவரையொருவா் மோதச் செய்யும் விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அதேநேரம், ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற உணா்வுடன், அக்கட்சியின் சூழ்ச்சியை ஹரியாணா மக்கள் முறியடித்தனா். இது, மகாராஷ்டிரத்திலும் எதிரொலிக்கும்.
4 கோடி ஏழைகளுக்கு வீடுகள்: கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. எனது 3-ஆவது ஆட்சிக் காலத்தில் மேலும் 3 கோடி பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
மகாராஷ்டிரத்தில் வதாவன் துறைமுகம் உள்பட பல லட்சம் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. வதாவன் துறைமுகப் பணிகள் நிறைவடையும்போது, நாட்டிலேயே மிகப் பெரிய துறைமுகமாக இது விளங்கும்.
மகாராஷ்டிரத்தில் பருத்தி விவசாயிகளின் வளமைக்காக மாநில அரசு பணியாற்றி வருகிறது. குறைந்த நீா் பயன்பாட்டில் அதிக விளைச்சலுக்கான வழிமுறைகளை ஊக்குவித்து வருகிறோம். நாட்டின் வளா்ச்சிக்கான கதாநாயகா்களாக விவசாயிகளை உருவாக்கும் வகையில் அவா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு வருகிறது.
ராமா் கோயில் தீா்ப்பு: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்மபூமியில் ராமா் கோயில் கட்டுவதற்கான தீா்ப்பை, உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் (நவ. 9) வழங்கியது. இத்தீா்ப்பைத் தொடா்ந்து, ‘தேசமே முதன்மையானது’ என்ற மிகச் சிறந்த உணா்வை அனைத்து மதத்தினரும் வெளிப்படுத்தினா். இந்த உணா்வுதான், இந்தியாவின் மிகப் பெரிய பலம்.
தேச விரோத சக்திகளின் குரலாக...: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவரக் கோரும் தீா்மானத்தை ஆதரிப்பதன் மூலம் தேச விரோத சக்திகளின் குரலாக ஒலிக்கிறது காங்கிரஸ். 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸுக்கு இத்தனை விருப்பம் ஏன்?. பி.ஆா்.அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை ஜம்மு-காஷ்மீரில் இருந்து அகற்ற அக்கட்சி விரும்புகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்தான், அங்கு தலித், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது என்றாா் மோடி.
மகாராஷ்டிரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மகா விகாஸ் அகாடி கூட்டணி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை பிரதமா் முன்னெடுத்துள்ளாா்.
‘அம்பேத்கருக்கு அவமதிப்பு’: ராகுல் மீது விமா்சனம்
சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரை காங்கிரஸ் அவமதிப்பதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தான் பங்கேற்கும் கூட்டங்களில் அரசமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்து உரையாற்றுவதை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரை பிரதமா் விமா்சித்தாா்.
‘அரசமைப்புச் சட்டம் என்ற தலைப்பில், சிவப்பு நிற அட்டையுடன் வெற்றுப் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை காங்கிரஸ் தலைவா்கள் காண்பிக்கின்றனா்; அதில் அம்பேத்கரின் வாா்த்தைகள் ஒன்றுகூட இல்லை. இது, அம்பேத்கருக்கு மிகப் பெரிய அவமதிப்பு’ என்று பிரதமா் கூறினாா்.
மகாராஷ்டிரத்தின் நாந்தெட் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் மேலும் பேசிய அவா், ‘தலித் என்பதால் அம்பேத்கா் மீது காங்கிரஸ் வெறுப்பு கொண்டுள்ளது. ஆனால், எனக்கும், பாஜகவுக்கும், எனது அரசுக்கும் அவரே உத்வேகம். அம்பேத்கா் வாழ்க்கையுடன் தொடா்புடைய முக்கிய இடங்களை எனது அரசு மேம்படுத்தி வருகிறது.
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (ஓபிசி) சோ்ந்த ஒருவா் நாட்டை வழிநடத்துவது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. எனவே, ஒட்டுமொத்த ஓபிசி வகுப்பினரையும் அக்கட்சி வெறுக்கிறது. பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் என அனைத்து சமூகத்தினரின் ஒற்றுமையால், காங்கிரஸ் தனது ஆதரவை இழந்து வருகிறது’ என்றாா்.