ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர் தற்கொலை செய்து கொண்டது பற்றி...
ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீநகர் நகரின் ஷிவ்போரா பகுதியில் உள்ள 61-ஆவது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தளத்தை சேர்ந்தவர் காவலர் நிர்மல் பால் சிங். இவர் திங்கள்கிழமை காலை தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரின் தவறான முடிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : தட்கல் நேரத்தில் செயலிழக்கும் ஐஆர்சிடிசி செயலி!
1990களில் இருந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பாதுகாப்புப் படை வீரர்களின் தங்களின் பணியின்போது இதுபோன்ற தவறான முடிவுகள் எடுப்பது தொடர் கதையாகி வருகின்றது.
நீண்ட காலம் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருத்தல், கடுமையான சூழலில் பணி செய்தல், பொழுதுபோக்கின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வீரர்களின் தற்கொலைக்கு காரணமாக மனநல உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில், வீரர்களுக்கு விடுப்பு, கடினமான சூழலில் வேலை நேரம் குறைப்பு, பொழுதுபோக்கு மற்றும் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை பாதுகாப்புப்படை சார்பில் செய்து கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.