ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் 3 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிஷ்த்வார் மாவட்டத்தின் சோனார் கிராமத்தில், கடந்த ஜன. 18 ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 7 வீரர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முஹமது எனும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், “ஆபரேஷன் டிராஷி-I” எனும் பெயரில் இந்திய ராணுவத்தின் வொயிட் நைட் கார்ப்ஸ் பிரிவினர், ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க 3 ஆவது நாளாக இன்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், ஏராளமான ட்ரோன்கள், மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், 12,000 அடி உயரத்தில் மலை மீது அமைந்திருந்த பயங்கரவாதிகளின் பதுங்கு குழியொன்று நேற்று தகர்க்கப்பட்டு அங்கிருந்து உணவுகள், போர்வைகள் மற்றும் குளிர்கால ஆடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான நபர்களைக் கைது செய்து பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.