பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொழிலதிபர் கெளதம் அதானியும் பங்கேற்றதாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிகழ்வுக்கு முந்தைய நாள் நள்ளிரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆங்கில ஊடகமான ‘தி நியூஸ் மினிட்’டுக்கு பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் நேர்க்காணல் ஒன்று அளித்துள்ளார்.
அந்த நேர்க்காணலில் பதவியேற்புக்கு முந்தைய நாள் நள்ளிரவு நடைபெற்ற சந்திப்பு குறித்து அஜித் பவார் பேசுகையில், “5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்வு நடந்தது. இந்த சந்திப்பு எங்கே நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அமித்ஷா, கெளதம் அதானி, பிரஃபுல் படேல், தேவேந்திர ஃபட்னவீஸ், பவார் சாஹிப் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும், பாஜக கூட்டணிக்கு சரத் பவார் ஆதரவு அளிக்காதது குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சரத் பவார் என்ன நினைக்கிறார் என்று உலகில் யாராலும் கணிக்க முடியாது. எனது சித்தி அல்லது அவர்களது மகள் சுப்ரியாவாலும் கூட” என்று பதிலளித்தார்.
பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அமித் ஷாவுடன் கெளதம் அதானி பங்கேற்றதாக அஜித் பவார் தெரிவித்திருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே கூறுகையில், நேர்க்காணலில் அஜித் பவார் தெரிவித்த சந்திப்பு பற்றியும், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பது குறித்தும் எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
சிவசேனை உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“மகாராஷ்டிரத்தில் பாஜகவை எப்படி ஆட்சிக்கு கொண்டுவருவது என்பது குறித்து முடிவெடுக்கும் கூட்டங்களில் அதானி அமர்ந்துள்ளதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அவர் பாஜகவின் அங்கீகரிக்கப்பட்ட பேரம் பேசுபவரா? கூட்டணியை சரிசெய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஒரு தொழிலதிபர், மகாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு இவ்வளவு ஆர்வமாகவும் நெருக்கமாகவும் உழைப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019-ல் நடந்தது என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்த சரத் பவார், பாஜகவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார்.
ஆனால், அஜித் பவார் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகவும், பாஜக தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், ஓரிரு நாள்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் சரத் பவாருக்கு ஆதரவு அளித்ததால், துணை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அஜித் பவாரும் தேசியவாத காங்கிரஸில் இணைந்து விட்டார்.
பின், அப்போதைய ஒருங்கிணைந்த சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.