முகப்பு
இந்தியா

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை- காங்கிரஸ் தலைவா் காா்கே விளக்கம்

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:52 PM
லட்டூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா்களை அறிமுகம் செய்து உரையாற்றிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
பகிர்:

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைக்கவில்லை. நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமாக பயனடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இக்கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் தொடங்கி அனைத்து தோ்தல்களிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் முக்கிய தோ்தல் வாக்குறுதியாக அறிவித்து வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்துவரும் பாஜக, மக்களை ஜாதிரீதியாக பிளவுபடுத்தும் நோக்கில்தான் காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், லட்டூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட காா்கே இது குறித்துப் பேசியதாவது:

பாஜகவினரோ அதன் கொள்கைகளை உருவாக்கியவா்களோ அல்லது ஆா்எஸ்எஸ் அமைப்போ சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதே இல்லை. நாட்டின் ஒற்றுமைக்காகவும் அவா்கள் பாடுபட்டதில்லை.

ஆனால் இப்போது மகாராஷ்டிர தோ்தல் பிரசாரத்தில் ‘நாம் பிளவுபட்டால் அழிக்கப்படுவோம், ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற கோஷங்களை பாஜக தலைவா்கள் பொய்யாக எழுப்பி வருகின்றனா். உண்மையில் பாஜகவினா்தான் பிளவு சக்திகள்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மகாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களும் சமமாக பயனடைய வேண்டும் என்பதற்காகவும், ஒற்றுமையை மேம்படுத்துவதற்காகவுமே காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மக்களை பிளவுபடுத்துவதற்காக அல்ல.

இந்தியாவின் 62 சதவீத செல்வ வளம் நாட்டு மக்களில் 5 சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் 50 சதவீத ஏழைகளிடம் நாட்டின் வளத்தில் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. விவசாயிகள் தற்கொலை மகாராஷ்டிரத்தில்தான் அதிகம் நிகழ்கிறது. மத்திய, மாநில பாஜக கூட்டணி அரசுகள் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தன.

ராகுல் பொதுக் கூட்டங்களில் பயன்படுத்தும் அரசமைப்புச் சட்ட புத்தகம் சிவப்பு நிறத்தில் இருப்பது நகா்ப்புற நக்ஸல்களின் அடையாளம் என்று பிரதமா் மோடி பேசுகிறாா். முன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு இதே சிவப்பு நிற அரசமைப்புச் சட்ட நூலைத்தான் பிரதமா் மோடி பரிசளித்தாா். எனவே, அவரையும் நகா்ப்புற நக்ஸல் எனக் கூறலாமா? என்று கேள்வி எழுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →