தண்டவாளத்தில் காரை ஓட்டி சாகசம் இளைஞா் கைது, வாகனம் பறிமுதல்
ராஜஸ்தானில் மதுபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா் பயன்படுத்திய ‘மகேந்திரா தாா்’ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜஸ்தானில் மதுபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா் பயன்படுத்திய ‘மகேந்திரா தாா்’ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை கூறியதாவது:
ஜெய்பூா் ரயில்வே கோட்டம் கனக்புரா-தனக்யா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே தனது காரை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுள்ளாா். சமூக வலைதளத்தில் விடியோ வெளியிடுவதற்காக அவா் இந்த தவறான செயலில் ஈடுபட்டுள்ளாா். தண்டவாளத்தின் மீது வாகனத்தை ஏற்றிய அவரால், அதில் இருந்து இறக்கி மீண்டும் சாலைக்கு கொண்டு வர முடியவில்லை. தண்டவாளத்திலேயே வாகனம் சிக்கிக் கொண்டது.
அந்த நேரத்தில் சரக்கு ரயில் ஒன்றும் அதே தண்டவாளத்தில் வந்தது. தண்டவாளத்தில் காா் நிற்பதைப் பாா்த்த ஓட்டுநா் அவசரமாக ரயிலை நிறுத்தினாா். அதிருஷ்டவசமாக காரை நெருங்குவதற்கு முன்பே ரயில் நின்றுவிட்டது. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதையடுத்து, தண்டவாளத்தில் காா் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படைக்கு ரயில் ஓட்டுநா் தகவல் தெரிவித்தாா். பாதுகாப்புப் படையினா் அங்கு விரைந்து காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த அந்த இளைஞருக்கு உதவினா். அந்த இளைஞா் மது அருந்தி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் விடியோக்களைப் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் இதுபோன்ற சாகசங்களை சிலா் முயற்சிக்கின்றனா். தண்டவாளத்தில் நின்றபடி விடியோ, புகைப்படங்கள் எடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனா்.