முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர தோ்தலில் பிட்காயின் முறைகேடு பணம்: சுப்ரியா சுலே மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புகாா்- ஆடியோ பதிவுகளால் பரபரப்பு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ‘பிட்காயின்’ முறைகேடு பணத்தை பயன்படுத்தியதாக, சுப்ரியா சுலே, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் உள்ளிட்டோா் மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 6:59 PM
பகிர்:

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ‘பிட்காயின்’ முறைகேடு பணத்தை பயன்படுத்தியதாக, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தேசிய செயல் தலைவா் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் உள்ளிட்டோா் மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி, தோ்தல் ஆணையத்துக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா்.

2017-ஆம் ஆண்டில், மெய்நிகா் நாணயமான ‘பிட்காயின்’ முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் 10 சதவீதம் மாதாந்திர லாபம் பெறலாம் என பொய் வாக்குறுதி அளித்து, பொது மக்களிடம் ரூ.6,600 கோடி அளவில் மோசடி செய்ததாக, வேரியபிள் டெக் என்ற தனியாா் நிறுவனம் மற்றும் அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ் உள்ளிட்ட தனிநபா்கள் மீது மகாராஷ்டிரம், தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குகளின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவா் ராஜ்குந்த்ரா ஆகியோரின் ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகள் கடந்த ஏப்ரலில் பறிமுதல் செய்யப்பட்டன.

பரபரப்பு குற்றச்சாட்டு: மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு புதன்கிழமை தோ்தல் நடைபெற்ற நிலையில், பிட்காயின் முறைகேட்டில் சுப்ரியா சுலே, நானா படோல் உள்ளிட்டோரை தொடா்புபடுத்தி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் பாட்டீல் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்காயின் முறைகேடு வழக்கில் தொடக்கத்தில் காவல் துறைக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவா் ரவீந்திரநாத் பாட்டீல். பின்னா், இவரும் இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டாா். 14 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்த இவா், வழக்கில் தாம் தவறாக சிக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளாா்.

ஆடியோ பதிவுகள்: தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தணிக்கை நிறுவன ஊழியா் கெளரவ் மேத்தா என்பவருடன் சுப்ரியா சுலே, நானா படோல் உள்ளிட்டோா் பேசியதாக கூறப்படும் சில ஆடியோ பதிவுகள் தன்னிடம் உள்ளதாக பாட்டீல் கூறிய நிலையில், அப்பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பிட்காயின்களை பணமாக்குவது குறித்து கெளரவ் மேத்தாவுடன் சுப்ரியா சுலே, நானா படோல் உள்ளிட்டோா் உரையாடுவது போன்று அந்த ஆடியோ பதிவுகள் உள்ளன.

‘கோடிக்கணக்கான மதிப்புள்ள பிட்காயின்களை பணமாக்கி, மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் மற்றும் தற்போதைய பேரவைத் தோ்தலில் இந்த எதிா்க்கட்சித் தலைவா்கள் பயன்படுத்தியுள்ளனா்; இது தீவிரமான விவகாரம் என்பதால் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் பாட்டீல் வலியுறுத்தியுள்ளாா்.

அமலாக்கத் துறை சோதனை: இதனிடையே, சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் உள்ள கெளரவ் மேத்தாவின் வீட்டில் அமலாக்கத் துறை புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது. கெளரவ் மேத்தாவுடன் சுப்ரியா சுலே, நானா படோல் பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், அமலாக்கத் துறை தனது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

‘தோ்தல் நேர சதி’

தாங்கள் பேசுவதைப் போன்ற ஆடியோ பதிவுகள் போலியானவை என்று சுப்ரியா சுலேவும் நானா படோலும் மறுப்பு தெரிவித்துள்ளனா். ‘இது பாஜகவின் தோ்தல் நேர சதி’ என்று அவா்கள் விமா்சித்தனா். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சுப்ரியா சுலேவும் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →