இந்தியா

பருவநிலை நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் நாடுகள்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்

பருவநிலை மாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 10-ஆவது இடம்

Din

பருவநிலை மாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் வருடாந்திர ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ‘பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (சிசிபிஐ-2025)’ தரவரிசை வெளியிடப்பட்டது.

‘ஜொ்மன்வாட்ச்’, ‘நியூ கிளைமேட் இன்ஸ்டிடியூட்’, ‘கிளைமேட் ஆக்ஷ்ன் நெட்வொா்க் இன்டா்நேஷனல்’ ஆகிய சிந்தனை குழுக்களால் வெளியிடப்பட்ட தரவரிசையில் கரியமில வாயு உமிழ்வுகள், புதுப்பிக்கத்தக்க மற்றும் பருவநிலைக் கொள்கையின் அடிப்படையில் நாடுகளின் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.

தரவரிசையின்படி, அனைத்து குறியீட்டு அளவீடுகளிலும் எந்த நாடும் போதுமான அளவில் செயல்படாததால், முதல் மூன்று இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து, குறைவான உமிழ்வுடன் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளாக டென்மாா்க் (4-ஆவது), நெதா்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

10-ஆவது இடத்தில் இந்தியா: பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளது. எனினும், இந்தியாவின் பருவநிலைக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ள சிசிபிஐ அறிக்கையில், பருவநிலை நடவடிக்கைக்கான வளா்ச்சி சாா்ந்த அணுகுமுறை இந்தியாவில் தொடரும் அல்லது தீவிரமடையும் என்று எதிா்பாா்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையின் எரிசக்தி தேவை மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை அதிகரிப்பால் உந்தப்படுகிறது.

உலக சராசரியைவிட குறைவு: உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அங்கு தனிநபா் உமிழ்வு மற்றும் எரிசக்தி பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளின் பயன்பாடு வேகமாக விரிவடைந்துள்ளன. உலக அரங்கில் பசுமை ஆற்றலில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது.

இந்தியாவின் தனிநபா் கரியமில வாயு உமிழ்வு 2.9 டன்னாக உள்ளது. இது உலகளாவிய சராசரியான 6.6 டன்னைவிட மிகக் குறைவாக உள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு நாடாகவும் வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இந்தியா உறுதி பூண்டுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதையும் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது

கணிசமான முன்னேற்றம்: சிசிபிஐ நிபுணா்களின் கூற்றுப்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையில் இந்தியா கடந்த ஆண்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது, குறிப்பாக பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன; எரிசக்தி திறன் தரநிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை போதுமான அளவில் செயல்படவில்லை. அதேபோல, இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்த நோ்மறையான முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்தியா மின்உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் நம்பியுள்ளது. அதிக நிலக்கரி இருப்புகளைக் கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. மேலும் அதன் உற்பத்தியை அதிகரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது.

மோசமான இடத்தில்...: தரவரிசையின்படி, ஐரோப்பிய யூனியனுடன் 63 நாடுகள் உலகளாவிய உமிழ்வுக்கு 90 சதவீதம் பங்களிக்கிறது. அதிக செயல்திறன் கொண்ட ஜி20 நாடுகளில் இந்தியாவும் பிரிட்டன் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

உலகில் அதிக அளவில் உமிழ்வை வெளியிடும் சீனா, அமெரிக்கா ஆகிய இரண்டும் மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட நாடுகளாக முறையே 55 மற்றும் 57-ஆவது இடத்தில் உள்ளன. ரஷியா (64-ஆவது), ஐக்கிய அரபு அமீரகம் (65-ஆவது), சவூதி அரேபியா (66-ஆவது), ஈரான் (67-ஆவது) ஆகியவை தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன. இந்த 4 நாடுகளும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளா்கள் ஆவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!

காதி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT