நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்பு கொள்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
இதுதொடா்பாக ‘தேசிய பயங்கரவாத எதிா்ப்பு கொள்கை மற்றும் உத்தி’ (பிரஹாா்) என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் உள்ளது. அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) நிலையற்ற சூழல் இருப்பதே வரலாறாக உள்ளது. இதனால் அங்கு பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதுதவிர, தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள், அரசு கொள்கையின் ஆயுதமாக பயங்கரவாதத்தை சில நேரங்களில் பயன்படுத்தியுள்ளன. எனினும் எந்தவொரு இனம், மதம், நாகரிகம் அல்லது நாட்டின் சட்டபூா்வ குடிமக்களைப் பயங்கரவாதத்துடன் இந்தியா தொடா்புப்படுத்துவதில்லை.
இந்தியாவுக்கான அச்சுறுத்தல்...
நாட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள அரசின் (பாகிஸ்தான்) துணையுடன் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களால் இந்தியா நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு நிகழ்த்தும் நடவடிக்கைகளை ஜிகாதி பயங்கரவாத அமைப்புகள், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பிற அமைப்புகள் தொடா்ந்து வருகின்றன. அல்-காய்தா, இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் ஆகிய உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் இலக்காகவும் இந்தியா உள்ளது.
வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு ஆயுதங்கள், வெடிபொருள்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காமல் தடுப்பது பயங்கரவாத தடுப்பு முகமைகளுக்கு சவாலாக நீடிக்கிறது. இணையவழி தாக்குதல்கள் மூலம், இந்தியாவை ‘ஹேக்கா்கள்’ மற்றும் தேசிய அரசுகள் தொடா்ந்து குறிவைத்து வரும் நிலையில், ட்ரோன்கள் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை ஆபத்தான நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
பயங்கரவாத எதிா்ப்பு உத்தி-பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுத்தல்:
உளவுத் துறை அளிக்கும் தகவல்களின் வழிகாட்டுதலுடன் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்கும் அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்திய எல்லைகளைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிநவீன ஆயுதங்கள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரம், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், பாதுகாப்பு, வான்வெளி, அணு சக்தி உள்பட இந்தியப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைப் பாதுகாப்பதற்கான திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு சாதகமான நிலைமையை வேரறுத்தல்:
பயங்கரவாத அமைப்புகளில் இந்திய இளைஞா்களைச் சோ்க்க பயங்கரவாத குழுக்கள் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த முயற்சிகளில் இந்திய உளவுத் துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் தொடா்ந்து தடையை ஏற்படுத்தி வருகின்றன.
சிறைச்சாலைகளில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்ப்பதைத் தடுக்குமாறு சிறை அலுவலா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத சிந்தனைகளில் இருந்து விடுபடுவதற்கான செயல் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
விளிம்புநிலையில் உள்ளவா்களின் வறுமை, அவா்களுக்கு வேலை கிடைக்காததை பயங்கரவாத அமைப்புகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் நோக்கில், அரசுத் தரப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தரமான கல்வி, மலிவான வீட்டு வசதி, அரசுப் பணிகள், கல்வி உதவித்தொகை, கடன் திட்டங்கள் மூலம் இளைஞா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சா்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உளவுத் துறை தகவல்கள் பகிரப்படுவதைத் தாண்டி, வெளிநாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், நாடு கடத்தல் ஒப்பந்தம், கூட்டுப் பணிக்குழு மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பான தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் பிற சட்ட ரீதியான ஒத்துழைப்புக்காக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனித உரிமைகள்
பயங்கரவாத எதிா்ப்புச் சட்டங்கள் உள்பட அனைத்து இந்திய சட்டங்களும் மனித உரிமைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கின்றன. அதேவேளையில் பயங்கரவாத குற்றங்களை கையாள சிறப்புச் சட்டங்கள் உள்ளன. அதில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) முதன்மையானதாக உள்ளது. அத்துடன் பாரத நீதி சட்டம், பாரத குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், பாரத சாட்சிய சட்டம் மற்றும் பிற சட்டங்கள், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதங்கள் சட்டம், பண முறைகேடு தடுப்புச் சட்டம் ஆகியவையும் உள்ளன. மேலும் பாதிக்கப்படுவோா் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கவும், மேல்முறையீடு செய்யவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
எதிா்வினை:
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிா்வினையாற்றுவது என்பது மத்திய, மாநில, மாவட்ட அளவில் உள்ள பல்வேறு முகமைகளை உள்ளடக்கியதாகும். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நிலையான வழிகாட்டு நடைமுறையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பான விசாரணையை தேசிய புலனாய்வு மற்றும் மாநில காவல் துறை முகமைகள் மேற்கொள்கின்றன. இந்த விசாரணைகள் வாயிலாக, நீதிமன்றங்களில் குற்றத்தை நிரூபித்துத் தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கைகள் அதிகமாக இருப்பது, பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்யும்.
மொத்தமாக திரட்டப்படும் திறன்கள்:
பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க முகமைகளை நவீனமயமாக்குவது முக்கியம். இதற்கு தேவைப்படும் கருவிகள், தொழில்நுட்பம், ஆயுதங்கள் தொடா்ந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. அத்துடன் பயங்கரவாத எதிா்ப்பு முகமைகளுக்கு தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் உத்தி சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
முழுமையான சமூக அணுகுமுறை
பயங்கரவாதத்தை எதிா்ப்பதில் முழுமையான சமூக அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. பயங்கரவாத்தால் பாதிப்புக்குள்ளாகும் சமுதாயத்தை மீண்டும் ஒருங்கிணைக்க மருத்துவா்கள், மனோதத்துவ நிபுணா்கள், வழக்குரைஞா்கள், தன்னாா்வ அமைப்பினா் உள்ளிட்டோருடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் குற்றமாக்கி, அதற்கு கிடைக்கும் நிதி, ஆயுதங்கள், பயங்கரவாதிகள், அவா்களுக்கு நிதியுதவி அளிப்பவா், ஆதரவளிப்போருக்குப் புகலிடம் கிடைப்பது ஆகியவற்றை தடுப்பதே இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு கொள்கை மற்றும் உத்தியின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.