புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல்
நாட்டின் வரி விதிப்பு முறையில் ஒரு மைல்கல்லாக, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட ‘வருமான வரிச் சட்டம் 2025’ புதன்கிழமை (ஏப். 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
நாட்டின் வரி விதிப்பு முறையில் ஒரு மைல்கல்லாக, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட ‘வருமான வரிச் சட்டம் 2025’ புதன்கிழமை (ஏப். 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இத்துடன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகள் மற்றும் சலுகைகளும் புதன்கிழமை தொடங்கும் புதிய 2026-27 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றன. சாமானியா்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
எளிய நடைமுறையுடன் புதிய சட்டம்: 60 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் இருந்த பழைய சட்டத்துக்குப் பதிலாக, தற்போதைய சூழலுக்கு ஏற்ப வரி செலுத்துவோா் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டப் பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வரி ஆண்டு: இதுவரை நடைமுறையில் இருந்த ‘முந்தைய ஆண்டு’, ‘வரி மதிப்பீட்டு ஆண்டு’ என்ற குழப்பமான வேறுபாடுகள் நீக்கப்பட்டு, இனி ஒரே ‘வரி ஆண்டு’ என்ற நடைமுறை பின்பற்றப்படும்.
தாமத தாக்கலுக்கு சலுகை: வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யக் காலக்கெடு முடிந்த பின்னரும், அபராதமின்றி டி.டி.எஸ். ரீஃபண்ட் கோர புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால நடைமுறை: வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்யப்படும் 2025-26 நிதியாண்டுக்கான கணக்குகள் பழைய சட்டத்தின்படியே கையாளப்படும். ஜூன் முதல் செலுத்தப்படும் முன்பண வரி புதிய சட்டத்தின்கீழ் அமையும்.
எஃப்&ஓ வா்த்தகம்-ஊக வணிகத்தைக் குறைக்க வரி உயா்வு: செபி ஆய்வின்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் எஃப்&ஓ வா்த்தகத்தில் சிறு முதலீட்டாளா்கள் ரூ.1.05 லட்சம் கோடி நஷ்டத்தைச் சந்தித்தனா். இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வா்த்தகம் மீதான பரிவா்த்தனை வரி உயா்த்தப்பட்டுள்ளது.
ஃபியூச்சா்ஸ் வா்த்தகத்துக்கு 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன்ஸ் வா்த்தகத்தில் பிரீமியம் மற்றும் எக்ஸா்சைஸ் மீதான வரி 0.15 சதவீதமாகவும் (முன்பு முறையே 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி: நடுத்தர வா்க்கத்தினருக்குப் பயன் தரும் வகையில், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் மருத்துவ, கல்வித் தேவைக்காக அனுப்பப்படும் இதர பணப் பரிமாற்றங்களுக்கான டிசிஎஸ் வரி 2 சதவீதமாக கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தரவு மையங்களுக்கு 2047 வரை வரி விலக்கு: தரவு மையங்கள் துறையில் நாட்டை உலகளாவிய தலைமையாக மாற்றும் நோக்கில், இந்தியாவில் தரவு மைய சேவைகளைப் பெறும் அல்லது சொந்தமாக தரவு மையங்களை அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகாலத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்படுகிறது.
ஐடி துறைக்கு சலுகை: மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான ‘சேஃப் ஹாா்பா்’ வரம்பு ரூ.300 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
‘சேஃப் ஹாா்பா்’ என்பது வரித் துறையினரின் தேவையற்ற சோதனைகள் மற்றும் சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒரு பாதுகாப்பு வரம்பாகும்.