முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...? மோடிக்கு நிகரானவர் ரேவந்த் ரெட்டி

எந்தவொரு பிரச்னையையும் வித்தியாசமாக அணுகுவதிலும், தீர்வு காண்பதிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரானவர் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியைக் குறிப்பிடுகிறார்கள்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 2:22 AM
பகிர்:

எந்தவொரு பிரச்னையையும் வித்தியாசமாக அணுகுவதிலும், தீர்வு காண்பதிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரானவர் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியைக் குறிப்பிடுகிறார்கள். பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, தான் பதவி ஏற்பதற்கு முன்னால் கோ பூஜை நடத்தியதில் இருந்து, மற்ற முதல்வர்களை முந்திக் கொண்டு அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்கச் சென்றது வரையில், மிகவும் சாதுர்யமாக அரசியல் சதுரங்க ஆட்டம் நடத்துபவர் என்று பாராட்டப்படுகிறார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் திருநங்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. "தெருவெல்லாம் திருநங்கைகள்' என்று பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாற்சந்திகளில் சிவப்பு விளக்குக்காக காத்திருக்கும் வாகனங்களைச் சுற்றி வந்து திருநங்கைகள் பணம் கேட்கிறார்கள் என்பதுதான் அவர்கள் குறித்த குற்றச்சாட்டு.

நவாபுகள், சுல்தான்கள் ஆட்சி செய்த பகுதிகளில் எல்லாம் அதிக அளவில் மூன்றாம் பாலினத்தவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் "ஹாரெம்' என்று அழைக்கப்படும் தங்களது டஜன் கணக்கிலான மனைவிமார்கள் தங்கி இருக்கும் அந்தப்புரத்தைக் காவல் காக்க மூன்றாம் பாலினத்தவரைத்தான் பணியமர்த்தினார்கள்.

மூன்றாம் பாலினத்தவருக்கான சமூக நீதியை வழங்க வேண்டும்; அதற்கு ஒரு வித்தியாசமான திட்டம் முதல்வர் ரேவந்த் ரெட்டியால் முன்மொழியப்பட்டிருக்கிறது. யார் மீது குற்றஞ்சாட்டப்படுகிறதோ அவர்களையே காவலர்களாக நியமித்துவிட்டால்... என்பதுதான் முதல்வரின் மூளையில் உதித்த தீர்வு.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல்வரிடமிருந்து அறிவிப்பு வந்தது. "ஹோம் கார்ட்ஸ்' எனப்படும் ஊர்க் காவல் படையினர் போல, மூன்றாம் பாலினத்தவர்களின் படையை உருவாக்குவது என்பதுதான் அது. அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு, முறையான பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் பகுதிநேர ஊதியமும் வழங்கப்படும்.

அனைத்து நாற்சந்திகளிலும் போக்குவரத்தை முறைப்படுத்த திருநங்கைகளை பணியமர்த்துவதன் மூலம் அவர்களுக்கு வேலை தந்ததாகவும் இருக்கும்; வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவும் இருக்காது என்பதுதான் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தீர்வு!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.