முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

அதிமுகவில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓ. பன்னீர் செல்வம் இன்று திமுகவில் இணையவுள்ளதாக தகவல் குறித்து...

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:01 AM
முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு
பகிர்:

அதிமுகவில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓ. பன்னீர் செல்வம் இன்று திமுகவில் இணையவுள்ளதாகவும், கோவையில் நடக்கும் திமுக மாநாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்வதற்கு முன் ஓபிஎஸ் சந்திக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இடையே ஒற்றுமை இல்லாத நிலையில், அதிமுக வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து கட்சியிலும் சட்ட ரீதியாக ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்து வந்தார். இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடிய நிலையில், தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்தது. இதையடுத்து கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (அதிமுக இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி) இணைந்து ஓபிஎஸ் போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட்டு வந்தார். இருப்பினும் அதிமுகவில் அடைக்கலம் தேடி தனது ஆதரவாளர்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக அறிவிக்கைவிட்டும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி சம்மதிக்கவே இல்லை.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக - அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு ஓபிஎஸ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பலமுறை ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக பெரிதும் உதவிபுரியும் என்று நம்பியிருந்த ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டிவிட்டு அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது பாஜக. இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதை விரும்பாத டி.டி.வி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நிலையில், நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைகிறேன் என்று இணைந்து கொண்டார். ஓபிஎஸ் எந்தவித முடிவு எடுக்காத நிலையில் இவரை நம்பிக் கொண்டிருந்த எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு வந்த அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்று திமுக, தாய்க் கட்சியான அதிமுக, தவெக என இணையத் தொடங்கினர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று இனி நான் என்ன சங்கர மடத்துக்காக போவேன் என்று விரக்தியாக பேசினார். ஆனால் ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவாதால் தனது இறுதி முடிவை அறிவிக்கும் சூழலுக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில் ஓபிஎஸ் மட்டும் பங்கேற்றார். கூட்டத்தின் முடிவில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவுவையும் சந்தித்துப் பேசினார். பின்னர் அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலினின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவு பெற்றதற்கு வாழ்த்தினேன். தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதையே ஐயப்பன் பேசியிருக்கிறார். மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துள்ளது என குறிப்பிட்டார்.

இதனால் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலை சந்திப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ்ஸின் சந்திப்பானது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் கவனம் பெற்றது.

இதனிடையே, சமீபத்தில் அவரது ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கினார். ஒபிஎஸ் உடனிருந்து எனது வாழ்நாளை வீணாக்கி விட்டேன். விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என விஜய் கூறுவதால் அவருக்கு அதரவளிக்கிறோம் என்றாா் அவா்.

ஓபிஎஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம்

இந்த நிலையில் , அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ். எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் சட்டப்பேரவையில் அவரது ஆதரவாளா் ஐயப்பனை பேச வைத்தது, எம்ஜிஆா், ஜெயலலிதாவை தெய்வமாக போற்றும் தொண்டா்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.

திமுக என்கிற தீய சக்தியை எதிா்த்து அதிமுகவை துவங்கி, அவா் உயிருடன் இருந்தவரை திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுத்து வைத்திருந்தாா். அதன் பிறகு திமுகவை வலுவாக எதிா்த்த ஒரு அரசியல் சக்தி ஜெயலலிதா.

இப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்று பன்னீா்செல்வம் தெரிவித்தது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறேன். அமமுகவுக்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் தான் நடைபெறும். இன்னும் அதற்கான பேச்சுவாா்த்தை ஆரம்பிக்கவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவா்கள் ஒரு முடிவை எடுப்பாா்கள். இப்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.

நாங்கள் எல்லாம் ஒரே அணியில் வந்தவா்கள்.தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக உடன் பேசுவேன். அதற்கான நேரம் இருக்கிறது. இப்போது கூட்டணி பலமாக இருக்கிறது. நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்று தினகரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இன்று இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் ஓபிஎஸ் முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற பேரவைத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகின்றது.

தவெகவுக்கு செல்ல மறுத்த ஓபிஎஸ்

மூன்று முறை முதல்வராக இருந்த நான், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குச் செல்வது சரியாக இருக்காது என்று சொல்லி விஜய்யின் தவெகவில் இணைய ஓபிஎஸ் மறுத்துவிட்ட நிலையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.

இதையடுத்து ஒபிஎஸ் திமுகவில் இணைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் எனச் சொன்னது.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய திட்டம்

இந்த நிலையில், திமுகவில்லை இணைவதற்கு ஜோதிடரின் ஆலோசனைப்படி பிப்.27 அல்லது 28- இல் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், கோவையில் நடக்கும் திமுக மாநாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்வதற்கு முன்பு ஓபிஎஸ் சந்தித்து இன்று(பிப்.27) இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு முதல்வர் இல்லத்தில் நடைபெறுமா அல்லது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் நடைபெறுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளள நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு, எம்எல்ஏ பதவி ராஜிநாமா குறித்து எந்த தகவலும் உறுதியாகவில்லை.

summary

3 time CM OPS to join DMK today

முழு கட்டுரையைப் படிக்க →