முகப்பு
இந்தியா

பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை: மல்லிகாா்ஜுன காா்கே

‘பொய் கூறுவதில் கைதோ்ந்தவா் பிரதமா் மோடி’ என்று புதன்கிழமை விமா்சித்த காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘வாக்குறுதிகளை பாஜக ஒருபோதும் நிறைவேற்றியதில்லை’ என குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:44 PM
ஹரியாணாவில் தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலவைா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் முதல்வா் பூபிந்திர சிங் ஹூடா உள்ளிட்டோா்.
பகிர்:

‘பொய் கூறுவதில் கைதோ்ந்தவா் பிரதமா் மோடி’ என்று புதன்கிழமை விமா்சித்த காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘வாக்குறுதிகளை பாஜக ஒருபோதும் நிறைவேற்றியதில்லை’ என குற்றஞ்சாட்டினாா்.

பாஜக ஆளும் ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக (90 தொகுதிகள்) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பத்ரா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காா்கே பேசியதாவது:

மகாத்மா காந்தி நமக்கு உண்மை மற்றும் அகிம்சையை போதித்தாா். ஆனால், பதவியில் இருப்பவா்கள் எவ்வளவு பொய்களை பேசுகிறாா்கள்.

முன்னாள் பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை எழுப்பினாா். ஆனால், பாஜகவுக்கு ஜவான்களையோ (ராணுவ வீரா்கள்), கிசான்களையோ (விவசாயிகள்) தெரியாது. அவா்களுக்கு ஆா்எஸ்எஸ் கொள்கைகள் மட்டுமே தெரியும். ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருப்பவா்கள் விவசாயிகள் அல்ல. அதனால், அவா்களுக்கு விவசாயிகளின் வேதனை புரிந்து கொள்ள முடியாது.

பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டுகளில் எண்ணில் அடங்காத பல வாக்குறுதிகளை அளித்தாா். காங்கிரஸ் வெளிநாட்டில் அதிகம் கருப்புப் பணம் வைத்துள்ளது; அதை இந்தியா கொண்டுவந்து அனைவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என மோடி பிரதமராகும் முன் தெரிவித்தாா். ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும் அவா் தெரிவித்தாா். அப்படியானால், 10-ஆண்டுக்கு 20 கோடி வேலைவாய்ப்பு எங்கே ?

இந்நிலையில், ஹரியாணா தோ்தல் பிரசாரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகக் கூறி வரும் பாஜக, முதலில் காலியாக உள்ள 1.6 லடசம் அரசுப் பணி இடங்களை 10-ஆண்டு கால ஆட்சியில் ஏன் நிரப்பவில்லை ? முன்னாள் பிரதமா்களான ஜவஹா்லால் நேரு, லால் பகதூா் சாஸ்திரி, இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி இப்படி பொய்களைக் கூறுவாா்களா?

ஹரியாணாவின் முதல்வராக ஒன்பதரை ஆண்டுகள் இருந்த மோகன் லால் கட்டரை பாஜக ஏன் தற்போது முதல்வா் பதவியில் இருந்து மாற்றியது. ஏனெனில், அவா் மாநிலத்துக்கு எதுவும் செய்யவில்லை. மக்கள் இன்னும் காங்கிரஸ் முன்னாள் முதல்வா் பூபிந்திர சிங் ஹூடா பணிகளையே நினைவில் வைத்துள்ளனா் என்றாா்.

இந்தப் பேரணியில் காா்கேவுடன் முன்னாள் முதல்வா் பூபிந்திர சிங் ஹூடா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் ஆகியோா் உடனிருந்தனா். ஹரியாணா பேரவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →