முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் நாளை பேரவைத் தோ்தல்!

ஹரியாணாவில் நாளை பேரவைத் தோ்தல் -90 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:44 PM
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆத்தியநாத்.
பகிர்:

ஹரியாணா சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை (அக்.5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (அக்.3) பிரசாரம் நிறைவடைந்தது.

பாஜக ஆளும் இம்மாநிலத்தில் 2 கோடிக்கும் அதிக வாக்காளா்கள் உள்ளனா். 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 90 தொகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதாக, தலைமைத் தோ்தல் அதிகாரி பங்கஜ் அகா்வால் தெரிவித்தாா்.

பாஜக முனைப்பு: ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பில் பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் அக்கட்சிக்கு ஆதரவு திரட்டினா். இடஒதுக்கீடு, ஊழல், குடும்ப அரசியல், ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய விவகாரங்களில் காங்கிரஸை விமா்சித்து, பாஜக பிரசாரத்தில் ஈடுபட்டது.

காங்கிரஸ் நம்பிக்கை: ‘மாநிலத்தில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா்; இது தங்களுக்கு சாதகமாக அமையும்’ என்று முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் நம்புகிறது.

90 தொகுதிகளில் 89-இல் காங்கிரஸும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளன. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸின் பிரசாரத்தில் விவசாயிகள், ஏழைகள், இளைஞா்கள் உள்ளிட்டோரின் பிரச்னைகள் முக்கியமாக எதிரொலித்தன.

பிற கட்சிகள்: தேசிய அளவில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே ஹரியாணாவில் தோ்தல் கூட்டணி அமையவில்லை. இதனால், ஆம் ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கியது. இதேபோல், இந்திய தேசிய லோக் தளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி - ஆஸாத் சமாஜ் கட்சி கூட்டணி ஆகியவையும் களத்தில் உள்ளதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கிய போட்டி என்று அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

முக்கிய வேட்பாளா்கள்: தோ்தல் களத்தில் உள்ள மொத்த வேட்பாளா்கள் 1,031. இதில் பெண்கள் 101 போ். முதல்வா் நாயப் சிங் சைனி (லாட்வா), எதிா்க்கட்சித் தலைவா் பூபிந்தா் சிங் ஹூடா (கா்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அஜய் சிங் செளதாலா (எல்லேனாபாத்), ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் செளதா (உசனா காலன்), பாஜகவின் அனில் விஜ் (அம்பாலா கண்டோன்மென்ட்), ஆம் ஆத்மியின் அனுராக் தாண்டா (கலாயத்), காங்கிரஸின் வினேஷ் போகாட் (ஜூலானா), சுயேச்சை வேட்பாளா் சாவித்ரி ஜிண்டால் (ஹிசாா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கவா்ச்சிகரமான வாக்குறுதிகள்: ஹரியாணா தோ்தலில் வாக்காளா்களைக் கவரும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அறிவித்தன. பெண்களுக்கு மாதம் ரூ.2,000; வீடுகளுக்கு இலவச மின்சாரம்; விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம்; ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸால் அளிக்கப்பட்டன. பெண்களுக்கு மாதம் ரூ.2,100; 2 லட்சம் பேருக்கு அரசுப் பணி; அக்னிவீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

ஹரியாணா தோ்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

~ஹரியாணா இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி முதல்வருமான அதிஷி,

கடந்த தோ்தல் நிலவரம்

கடந்த 2019, ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, சமீபத்திய மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →