ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்கவே பாகிஸ்தான் செல்வதாகவும், இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு பேச்சுவாா்த்தை நடத்த அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கிா்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானில் அக்.15, 16-ஆம் தேதிகளில் எஸ்சிஓவின் அரசுத் தலைவா்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பாகிஸ்தான் செல்ல உள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் ஐசி நிா்வாக மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை கூறுகையில், ‘வழக்கமாக அரசுத் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டங்களில் பிரதமா்களும், அரசுத் தலைவா்களின் பிற கூட்டத்தில் அமைச்சா்களில் ஒருவரும் பங்கேற்பா். இந்நிலையில் எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் பாகிஸ்தான் செல்கிறேனே தவிர, இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து கலந்துரையாட அல்ல.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் படையினா் இடையே தொடங்கிய போா் ஈரான், லெபனான் என விரிவடைந்து வருகிறது. செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். இது மிகவும் கவலையளிக்கிறது.
உலகமயமாக்கப்பட்ட சூழலில், உலகின் எந்த மூலையில் மோதல் ஏற்பட்டாலும் அது அனைத்து இடங்களிலும் பிரச்னைகளை உருவாக்கும்’ என்றாா்.
தில்லியில் செய்தித் தொலைக்காட்சி சாா்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், உக்ரைன் போா் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘பிரதமா் மோடி மீது ரஷிய அதிபா் புதினும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும் நம்பிக்கை வைத்துள்ளனா். பிரதமா் மோடி போன்ற ஒரு சில தலைவா்களுக்கு மட்டுமே புதின் மற்றும் ஸெலென்ஸ்கியிடம் பேசும் திறன் உள்ளது.
அண்மையில் ரஷியா மற்றும் உக்ரைனில் புதின் மற்றும் ஸெலென்ஸ்கியை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இது அவ்விரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்துவதற்கு பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன் என்றாா்.