கர்நாடகத்தில் சாவர்க்கர் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிப்பதற்காக, அமைச்சரின் மனைவி குறித்து பாஜக விமர்சித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் புதன்கிழமையில் (அக். 2), விநாயக் தாமோதர் சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு பலதரப்பட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜகதான் அவரது கருத்துக்கு பெரும் எதிர்ப்புத் தீயைக் கிளப்பியது.
இந்த நிலையில், பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு, தங்கள் சமூக ஊடகங்களில் ``வீர சாவர்க்கர் ஒரு பிராமணர்; அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக, பிராமண சமூகத்தைச் சேர்ந்த உங்கள் தந்தை மாண்புமிகு குண்டுராவ் உங்களிடம் சொன்னாரா அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் மனைவி தபசும் உங்களிடம் சொன்னாரா?’’ என்று பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, தினேஷ் குண்டுராவின் மனைவி தபசும், தனக்கு எதிரான அவதூறு கருத்துகளைக் கூறிய பாஜக மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ``தீவிர அரசியலில் இல்லாத போதிலும், எனக்கு எதிராக இழிவான மற்றும் வகுப்புவாத அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டதற்காக, பாஜக மீது கர்நாடக மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். ஒரு பெண்ணை தாக்குவது என்பது அற்பமானது; பெண்கள் மரியாதைக்குரியவர்கள்.
சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி என்ற முறையில், எனது திருமணம் மற்றும் எனது முஸ்லீம் நம்பிக்கை காரணமாக நான் தேவையற்ற தாக்குதல்களுக்கும் வகுப்புவாத குறிப்புகளுக்கும் ஆளாகியுள்ளேன். பாஜக தலைவர்களும், அவர்களின் சமூக ஊடகப் பதிவுகளும் என்னை மீண்டும் மீண்டும் குறிவைப்பது ஒரு வழக்கமாகிவிட்டது.
அரசியலில் ஈடுபடாத ஒருவர் என்ற முறையில், எனது தனிப்பட்ட வாழ்க்கையும் சமூகமும் அரசியல் களத்தில் இழுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களை அவர்களின் உறவு காரணமாக குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனக்கு எதிராக இழிவான கருத்துக்களை வெளியிட்டதற்காகவும், நற்பெயருக்கு சேதம் விளைவித்ததற்காகவும், உணர்ச்சிபூர்வமான துயரத்தை ஏற்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இளைஞா்களை போதைப் பொருளின் உலகுக்கு அழைத்து செல்கிறது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.