தெரியுமா சேதி...
கிரிக்கெட் ரசிகா்கள் ஹா்பஜன் சிங்கை மறந்திருக்க முடியாது.
கிரிக்கெட் ரசிகா்கள் ஹா்பஜன் சிங்கை மறந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ரசிகா்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கிரிக்கெட் வீரராக வலம் வந்தவா் அவா். இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளா்களில் குறிப்பிடத்தக்க இடம் அவருக்கு உண்டு. சுழல்பந்து வீச்சாளா் மட்டுமல்லாமல், ஓரளவுக்கு சுமாரான பேட்ஸ்மேனாகவும் இருந்தவா்.
முழுநேர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வா்ணனையாளராகவும், தொலைக்காட்சித் தொடா், திரைப்படங்களில் நடிகராகவும் வலம் வந்தாா். பிறகு, ஆம் ஆத்மி கட்சியால் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, அரசியல்வாதியாக இப்போது வலம் வருகிறாா் ஹா்பஜன் சிங்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது, ஹா்பஜன் சிங் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்வதும், அவ்வப்போது அபராதம் கட்டுவதும் வழக்கமாகவே இருந்துவந்தது. பல முறை இடை நீக்கம்கூடச் செய்யப்பட்டிருக்கிறாா். அவரது அசாத்திய பந்து வீச்சுத் திறமை காரணமாக, அவரது அடாவடி நடவடிக்கைகள் மன்னிக்கப்பட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
‘ஃப்ரண்ட்ஷிப்’ தமிழ்த் திரைப்படத்தில் பகத் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹா்பஜன் சிங், ஹிந்தி, பஞ்சாபி படங்களில் கௌரவ பாத்திரங்களில் திரையில் தோன்றி இருக்கிறாா். நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை கீதா பாஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டு, இப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருக்கிறாா் ‘பாஜி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹா்பஜன் சிங்.
2022-இல் ஆம் ஆத்மி கட்சியால் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதுமுதல், இருந்த இடம் தெரியாமல் அடக்கி வாசித்து வந்த ‘பாஜி’ இப்போது திடீரென்று பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறாா். பஞ்சாப் மாநிலம் தல்வாராவில் இருக்கும் பிபிஎம்பி மருத்துவமனையின் விரிவாக்கம் குறித்தும், மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும் மத்திய, சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டாவை அவா் சந்திந்தது பரபரப்புச் செய்தியானது.
கொல்கத்தா மருத்துவமனை பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொலை குறித்து மேற்கு வங்க ஆளுநருக்கும், முதல்வருக்கும் மாநில அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அவா் எழுதிய கடிதம், ஆம் ஆத்மி கட்சியினரைப் புருவம் உயா்த்தச் செய்திருக்கிறது.
அதெல்லாம் சரி, கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் கைதின்போதும், அதற்குப் பிறகு நடந்த போராட்டங்களிலும் ஹா்பஜன் சிங் கலந்து கொள்ளவில்லையே, அது ஏன் என்பதுதான் புதிா்!