70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள்; "எல்லாப் புகழும் இறைவனுக்கே': ஏ.ஆர். ரகுமான்
"தேசிய திரைப்பட விருது பெற்றது பெருமை அளிப்பதாகவும், எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றும் "பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.
நமது நிருபர்
"தேசிய திரைப்பட விருது பெற்றது பெருமை அளிப்பதாகவும், எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றும் "பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "பொன்னியின் செல்வன்-1' சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் அதன் தயாரிப்பாளர்களாக மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ் கரண், அதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக ரவி வர்மன், சிறந்த பின்னணி இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.
இதேபோன்று, "திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இதே படத்தில் "மேகம் கருக்காதா' எனும் பாடலுக்கு சிறந்த நடனம் அமைத்ததற்காக நடனக் கலைஞர் சதீஷ் கிருஷ்ணனுக்கும் குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவித்தார். அதேபோன்று, கன்னடத்தில் வெளிவந்த "காந்தாரா' திரைப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டிக்கு அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே...: இந்த தேசிய விருது கிடைத்தது குறித்து செய்தியாளர்களிடம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், "இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.
மணிரத்னம் படத்தில் மீண்டும் பணியாற்றியது சந்தோஷமாக இருக்கிறது. கரோனா காலத்திலும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஏராளமானோரின் கடின உழைப்பு உள்ளது. இந்தப் படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.
மகிழ்ச்சி அளிக்கிறது:
சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கூறுகையில், "விருதுக்காக நான் பணியாற்றுவதில்லை. நாம் செய்யும் வேலையை தொடர்ந்து ஒழுங்காக செய்வோம். இந்தப் படத்துக்கு விருது கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த விருதை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.
உழைப்புக்கு கிடைத்த விருது: சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளேன். தற்போது கடின உழைப்புக்குக் கிடைந்த இந்த விருதை எனது தாய் அன்னபூரணிக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.