தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு ஒன்பது நாள்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
நாட்டின் பிரதான மழைபொழிவுக்கு வகை செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த வாரம் விடைபெற்றுவிடும். அதன்பிறகு காற்று திசை மாற்றம் காரணமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.
வடமாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும். இருப்பினும், மாநிலத்தின் மத்திய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகள் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை நீடிக்கவுள்ள வடகிழக்குப் பருவமழையின்போது பொதுவாக தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ மழை பெய்யும்.
இந்தாண்டு மழைப்பொழிவு லா நினாவின் சாத்தியமான தாக்கத்தைப் பொருத்து அமையும். முன்னதாக தமிழகத்தில் 1940 மற்றும் 2021-க்கும் இடையே 42 முறை லா நினா நிகழ்வுகளின்போது 69 சதவீத அதிக மழை பெய்துள்ளது.
லா நினா ஏற்பட்ட 2010, 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 2010 மற்றும் 2023ல் அதிக மழையும், 2016ல் குறைந்த மழையும் பெய்தது.
இதற்கிடையில், தமிழக அரசு பருவமழைக்குத் தயாராகி வருகிறது, மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகங்கள், சுகாதாரம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பிற துறைகளுடன் ஆலோசனை நடத்தி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் வடிகால்களைச் சுத்தப்படுத்தவும், தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், பள்ளங்களை மூடுதல் உள்ளிட்ட அடிப்படை சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.