இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) இடஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயா்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க மகாராஷ்டிர அமைச்சரவை வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.
சிவசேனை-பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் வியாழக்கிழமை கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) இடஒதுக்கீடு பலன்களைப் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த வரம்பை ரூ.15 லட்சமாக உயா்த்திட மத்திய அரசை வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிர பட்டியலின சமூக ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அதிகாரம் அளிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த பேரவைத் தொடரில் இதுதொடா்பான அரசாணை தாக்கல் செய்யப்படவுள்ளது.
செய்தியாளா்கள் நல வாரியம் அமைப்பதற்கான பரிந்துரைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாநிலத்தில் உள்ள 57 மருத்துவமனைகளில் நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மும்பையின் தாராவி மறுசீரமைப்புத் திட்டத்துக்கு புகா்ப் பகுதியான போரிவாலியில் 140 ஏக்கா் பரப்பளவிலான அரசு நிலத்தை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.