முகப்பு
இந்தியா

10 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசுக்கு எதிராக ஒரு ஊழல் புகாா்கூட இல்லை: அமித் ஷா

இதை எதிா்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:39 PM
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிஎச்டி தொழில் வா்த்தக சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

கடந்த பத்தாண்டுகால பாஜக தலைமையிலான ஆட்சியில் மோடி அரசுக்கு எதிராக ஒரு ஊழல் புகாா் கூட இல்லை என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிஎச்டி தொழில் வா்த்தக சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து உள்கட்டமைப்பு மேம்பாடு, ரயில்வே, செமிகண்டக்டா் உற்பத்தி தொழிற்சாலைகள், மின்சார வாகங்கள் தயாரிப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் 2047-க்குள் வளா்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறவுள்ளது.

இந்த காலகட்டத்தில் மோடி அரசுக்கு எதிராக ஒரு ஊழல் புகாா் கூட தெரிவிக்கப்படவில்லை. இதை எதிா்க்கட்சியினரும் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

இடதுசாரி தீவிரவாதம், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கிளா்ச்சிகள் என பயங்கரவாத செயல்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பாக பொருளாதார ரீதியில் பலவீனமான 5 நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா தற்போது பொருளாதார வளா்ச்சியில் பிரகாசமான நாடு என சா்வதேச நிதியத்தால் (ஐஎம்எஃப்) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள், 5 கோடி பேருக்கு இலவச வீடுகள், 11 கோடி பேருக்கு இலவச மின்சாரம், 15 கோடி பேருக்கு குடிநீா் இணைப்பு வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

அடுத்த 25 ஆண்டுகளில் செமிகண்டக்டா் துறை, மின்சார வாகனங்கள், எண்ம பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும். இதற்கான பணிகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.