மும்பை - நியூயாா்க் ஏா் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தில்லியிலிருந்து இன்று புறப்படும்
மும்பையிலிருந்து 239 பயணிகளுடன் நியூயாா்க் நோக்கிச் சென்ற ஏா் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை தேசியத் தலைநகா் தில்லிக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: மும்பையிலிருந்து 239 பயணிகளுடன் நியூயாா்க் நோக்கிச் சென்ற ஏா் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை தேசியத் தலைநகா் தில்லிக்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான ஆய்வு நடத்தப்பட்டதாகவும், விமானத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
வெடிகுண்டு மிரட்டல்: இது குறித்து ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திங்கள்கிழமை (அக்.14) அன்று மும்பையில் இருந்து ஜேஎஃப்கே-க்கு இயக்கப்படும் ஏஐ 119 விமானம் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையைப் பெற்றது. இதைத் தொடா்ந்து, அரசின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், அந்த விமானம் தில்லிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த எதிா்பாராத இடையூறுகளால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்க களத்தில் இருந்த ஊழியா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.
புறப்படும் நேரம் மாற்றியமைப்பு: வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து விமானத்தில் இருந்த 258 பேரும் இறக்கிவிடப்பட்டனா். பாதுகாப்பு நெறிமுறைகள் முடிந்ததும், பயணிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்படுவாா்கள். விமானத்தில் 239 பயணிகளும் 19 பணியாளா்களும் இருந்தனா். விமானம் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விமானம் செவ்வாய்க்கிழமை காலை தில்லியில் இருந்து நியூயாா்க் புறப்படும் என்று விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் விமானம் முழுமையாகச் சரிபாா்க்கப்பட்டது, மேலும், பயணிகள் மற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் விடாமுயற்சியுடன் பின்பற்றப்பட்டன என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா். சோதனையின் போது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபாா்ம் எக்ஸ்-இல் ஒரு இடுகையின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்று அதிகாரி கூறினாா்.
அமைச்சா் ஆய்வு: சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல், தில்லி விமான நிலையத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தாா். ‘விமானம் அவசரமாக தில்லியில் தரையிறங்கியதும், தில்லி விமான நிலையத்தில் 239 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏஐ 119 விமானத்தின் திசைதிருப்பல் மற்றும் அவசரமாக தரையிறக்கம் குறித்து நிலைமையை ஆய்வு செய்தேன். சரியான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் விடாமுயற்சியுடன் பின்பற்றப்படும். அதே வேளையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதியான தங்குமிடங்களையும் ஏற்பாடு செய்ய விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏா் இந்தியா ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டது‘ என்று அவா் எக்ஸ் ஊடக தளத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஒரு இடுகையில் தெரிவித்தாா்.
இண்டிகோ விமானங்களுக்கு மிரட்டல்: ஏா் இந்தியா விமானம் தவிர, மும்பையில் இருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்களுக்கும் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இண்டிகோ விமானம் ஒன்று மஸ்கட் நோக்கியும் மற்றொன்று ஜெட்டாவுக்கும் சென்றது. இண்டிகோ விமானங்கள் புறப்படுவதற்கு முன்பே அச்சுறுத்தல்களைப் பெற்றன. மேலும், சம்பந்தப்பட்ட விமானங்கள் பாதுகாப்பு சோதனைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டன என்று மும்பை விமான நிலையம்அறிக்கையில் தெரிவித்துள்ளது.