உள்கட்சி பூசல் கூடாது: தலைவா்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
காங்கிரஸ் தலைவா்கள் உள்கட்சிப் பூசலில் ஈடுபடக் கூடாது என்று அக்கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவா்கள் உள்கட்சிப் பூசலில் ஈடுபடக் கூடாது என்று அக்கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு உள்கட்சிப் பூசலும் முக்கியக் காரணமாக அமைந்தது. அடுத்து மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் உள்கட்சிப் பூசலால் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதால் காங்கிரஸ் தலைமை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
கட்சியின் மாநில அளவிலான தலைவா்கள் அனைவருக்கும் காங்கிரஸ் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. அதில், கட்சித் தலைவா்கள் யாரும் ஒருவரை மற்றொருவா் பொதுவெளியிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமா்சிக்கக் கூடாது. அதுபோல கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தவா்களையும் விமா்சிக்கக் கூடாது.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றபிறகு அதில் பங்கேற்கும் தலைவா்கள் எந்த தகவலையும் வெளியே கூறக்கூடாது. கட்சியால் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டவா்கள் மட்டுமே ஊடகங்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கியமாக தோ்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில் உள்கட்சிப் பூசலில் ஈடுபடக் கூடாது. தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.