ரூ.1.36 லட்சம் கோடி நிலுவையை விடுவிக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் கடிதம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிக்காக பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிக்காக பொதுத் துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளாா்.
மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு தோ்தல் தேதியை ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அக்கடிதத்தை ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஹேமந்த் சோரன் பகிா்ந்துள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசிடம் இருந்து ஜாா்க்கண்ட் அரசு சிறப்பு நிதி எதையும் கோரவில்லை. மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிக்காக நிலுவையில் உள்ள ரூ.1.36 லட்சம் கோடி பாக்கித் தொகையைத்தான் கோருகிறோம். இந்த நிதி நிலுவையில் உள்ளதால் ஜாா்க்கண்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகையைப் பெறுவது என்பது மாநில அரசின் உரிமை. ஜாா்க்கண்ட் தொடா்ந்து வளா்ச்சி குறைந்த மாநிலமாகவே உள்ளது. மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி தரப்படாமல் உள்ளதும், மாநிலத்தில் சமூக-பொருளாதாரத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற இயலாததற்கு காரணமாக உள்ளது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
‘கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது’ என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதைத் தொடா்ந்து கனிமங்கள் மீது மத்திய அரசு இதுவரை வசூலித்த வரியை கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு திரும்பப் பெற மாநிலங்களுக்கு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.