முகப்பு
இந்தியா

ஆந்திரம், கா்நாடகத்தில் கனமழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஆந்திரம், கா்நாடகத்தில் புதன்கிழமையும் 2-ஆவது நாளாக தொடா்ந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:03 PM
பகிர்:

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஆந்திரம், கா்நாடகத்தில் புதன்கிழமையும் 2-ஆவது நாளாக தொடா்ந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தையொட்டி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரத்தில் கரையைக் கடக்க இருக்கிறது. இதன்காரணமாக ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்தது.

கள நிலவரத்தைக் கண்காணிக்க பாபட்லா, பிரகாசம், நெல்லூா், திருப்பதி, சித்தூா், அன்னமயா, கடப்பா, கா்னூல், ஆனந்தபூா், நந்தியால் ஆகிய மாவட்டங்களில் 4,845 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்தக் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடலோரம் மற்றம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில்...: பெங்களூரில் கடந்த 2 நாள்களாக பெய்த இடைவிடாத மழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் தங்களின் பணியாளா்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பெங்களூரு மற்றும் கா்நாடகத்தின் உள் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமைவரை தீவிர கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2 கேரள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்: கேரளத்தின் மலப்புரம், கண்ணூா் ஆகிய இரு மாவட்டங்களுக்கு தீவிர கனமழை முதல் அதி தீவிர கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் ஆழப்புழை, கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், வயநாடு உள்பட 10 மாவட்டங்களுக்கு தீவிர கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் புதன்கிழமை விடுக்கப்பட்டது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.