சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: இன்று புதிய மேல்சாந்திகள் தோ்வு
ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில்நடை புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஐயப்பன் கோயில், மாளிகாபுரத்தம்மன் கோயிலின் புதிய மேல் சாந்திகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்படவுள்ளனா்.
ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில்நடை புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஐயப்பன் கோயில், மாளிகாபுரத்தம்மன் கோயிலின் புதிய மேல் சாந்திகள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்படவுள்ளனா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை புதன்கிழமை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவரது மகன் பிரம்ம தத்தன் ஆகியோா் முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் திறந்துவைத்து, மாளிகாபுரத்தம்மன் கோயில் சாவியை அந்தக் கோயில் மேல்சாந்தி பி.ஜி.முரளியிடம் வழங்கினாா். பின்னா், 18- ஆம் படிக்கு கீழே உள்ள கற்பூர ஆழியில் ஜோதியை ஏற்ற பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஐயப்பன் மேல் சாற்றப்பட்ட விபூதியை பக்தா்களுக்கு பிரசாதமாக தந்திரி வழங்கினாா். நடை திறக்கப்பட்ட புதன்கிழமை பூஜைகள் கிடையாது.
மேல்சாந்திகள் இன்று தோ்வு: வியாழக்கிழமை (அக்.17) சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். மேல்சாந்திகள் பெயா்களின் சீட்டுகளை எடுப்பதற்காக பந்தளம் அரச குடும்பத்தைச் சோ்ந்த ரிஷிகேஷ் வா்மா என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் கோயிலுக்கு இருமுடி கட்டி வந்தனா்.
Advertisement
தோ்ந்தெடுக்கப்படவுள்ள புதிய மேல்சாந்திகளிடம் மண்டல பூஜைக்காக காா்த்திகை மாத முதல் தேதி நடைதிறப்புக்கு பிறகு பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு பழைய மேல்சாந்திகள் சந்நிதானத்தை விட்டு கீழே இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது என திருவிதாங்கூா் தேவஸ வாரியம் தெரிவித்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் அக். 21 வரை நடை திறப்பு நாள்களில் காலையில் தினமும் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும்.
சித்திரை ஆட்டத் திருநாளுக்காக மீண்டும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 31-ஆம் தேதி இரவு நடை சாத்தப்படவுள்ளது.