முகப்பு
இந்தியா

மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் அற்ப மனுக்களால் சலிப்பு: உச்சநீதிமன்றம்

ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 18 அக்டோபர், 2024 at 11:00 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

மாநிலங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அற்பமான மனுக்களால் சலிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், ஜாா்க்கண்ட் அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஜாா்க்கண்டில் ஒழுங்கீனமாக நடத்தல், கடமை தவறுதல், மேல் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், ரவீந்திர கோப் என்ற மாநில அரசு ஊழியா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சோ்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாா்க்கண்ட் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தற்போது ஜாா்க்கண்ட் அரசு தாக்கல் செய்துள்ளதைப் போல பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தாக்கல் செய்யும் அற்பமான மனுக்களால் உச்சநீதிமன்றம் சலிப்படைந்துள்ளது.

இத்தகைய வழக்குகளின் செலவை மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டியதில்லை என்பதால், இந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்துக்கு சுமையை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று கடந்த 6 மாதங்களாக உச்சநீதிமன்றம் தெரிவித்து வருகிறது. இந்த எச்சரிகையையும் மீறி, இத்தகைய அற்பமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த அதிகாரி பொறுப்பு என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளது. அந்த அதிகாரியிடம் வழக்குச் செலவையும் வசூலிக்கலாம் என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து ஜாா்க்கண்ட் அரசின் மனுவை தள்ளுபடி செய்து, அந்த அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை 4 வாரங்களில் உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் (ஏஓஆா்) சங்கம், உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தில் தலா ரூ.50,000-ஆக செலுத்த உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments