பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்துக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புத்தமதத் திருநாளான சர்வதேச அபிதம்ம தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் புத்தரின் போதனைகளில் இருந்து உலகம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. போரைத் தவிர்த்து அமைதிக்கான வழியை உலக நாடுகள் அமைக்க வேண்டும்.
பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை அளித்தது இந்த நிகழ்வை மேலும் சிறப்பானதாக்குகிறது. பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்துக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும்.
பாலி மொழி இன்று பயன்பாட்டில் இல்லை என்பது வருத்தத்துக்குரியதாகும். பாலி மொழியைக் காப்பாற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
ஒரு நாகரிகத்தின் ஆன்மாவாக மொழிகள் இருக்கின்றன. பாலிக்கு செம்மொழி அந்தஸ்தை அளித்தது அம்மொழியைக் கௌரவிக்கும் அரசின் பணிவான நடவடிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு பாலி செம்மொழி அந்தஸ்தைப் பெற 70 ஆண்டுகள் ஆகியுள்ளது.
ஒவ்வொரு நாடும் தனது பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதன் அடையாளத்தை அழிக்க படையெடுப்பாளர்கள் முயன்றனர். சுதந்திரம் பெற்ற பிறகும் அடிமை மனப்பான்மையைக் கொண்டிருந்தவர்கள் நாட்டின் அடையாளத்தை அழிக்க முயன்றனர்.
எனது அரசின் கொள்கைகளும் திட்டங்களும் புத்தரின் போதனைகளை வழிகாட்டியாகக் கொண்டுள்ளன. நிலையற்ற தன்மையையும் பாதுகாப்பற்ற தன்மையையும் கொண்டுள்ள உலகம் புத்தரின் போதனைகளில் இருந்து தனது பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஒட்டுமொத்த உலகமும் போரால் தீர்வு காண முடியாது; மாறாக புத்தரின் போதனைகளில் இருந்து தீர்வு காண முடியும். அமைதிக்கான வழியை அவரது போதனைகளில் இருந்து பெற முடியும்.
மோதலும் பூசலும் அமைதிக்கு வழிவகுக்காது. அமைதியைவிட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை. ஒவ்வொருவருக்கும் நலவாழ்வு என்பதே புத்தரின் செய்தியாகும்.
உலகத்துக்கு இந்தியா புத்தரைத்தான் அளித்ததே தவிர யுத்தத்தை அல்ல என்று நான் ஐ.நா. சபையில் பேசும்போது குறிப்பிட்டேன்.
இந்தியாவின் ஆன்மாவில் புத்தர் வாழ்கிறார். அவரது போதனைகள் இந்த அமிர்த காலத்தில் நம்மை வழிநடத்தும்.
நாடு தற்போது தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டு சுயமரியாதை, தன்னம்பிக்கை, சுய கௌரவம் என்ற பாதையில் பயணிக்கிறது. இந்த மாற்றம் காரணமாக நாடு துணிச்சலான முடிவுகளை எடுக்கிறது.
பாலி உள்பட நாட்டின் ஒவ்வொரு மொழியும் நம்முடையதுதான். தேசத்தின் கட்டமைப்பில் ஒவ்வொரு மொழியும் பங்களித்துள்ளது. நமது மொழிகளைக் காக்கும் மேடையாக நமது புதிய தேசிய கல்விக் கொள்கை உருவெடுத்துள்ளது.
அம்பேத்கர் மற்றும் புத்த மதம் தொடர்புடைய இடங்களை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.