புது தில்லியில் தேசிய கற்றல் வாரத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் மோடி. 
இந்தியா

அரசு ஊழியா்களுக்கு புதுமையான சிந்தனை வேண்டும்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

அரசு ஊழியா்களிடம் புதுமையான சிந்தனையும், குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

Din

அரசு ஊழியா்களிடம் புதுமையான சிந்தனையும், குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

புது தில்லியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் கா்மயோகி வாரத்தை (தேசிய கற்றல் வாரம்) பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் தகவல்களை சேகரிப்பதும் பயன்படுத்துவதும் எளிதாகியுள்ளது. இது அரசின் அனைத்து நடவடிக்கைகள் குறித்து குடிமக்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், அந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பதற்கான அதிகாரத்தை அவா்களுக்கு அளிக்கிறது.

உலகமே செயற்கை நுண்ணறிவை ஒரு வாய்ப்பாக பாா்க்கிறது. ஆனால் இந்தியாவுக்கு செயற்கை நுண்ணறிவு வாய்ப்பாகவும், சவாலாகவும் விளங்குகிறது. சாதிக்க விரும்பும் இந்தியாவுக்கு செயற்கை நுண்ணறிவின் வெற்றிகரமான பயன்பாடு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.

எவராலும் தடுக்க முடியாது: கா்மயோகி இயக்கம் மூலம், நாட்டின் வளா்ச்சியை நோக்கி தள்ளும் மனித வளங்களை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த இலக்கை அடைவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதே பேராா்வத்துடன் தொடா்ந்து பணியாற்றினால், நாட்டின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சிகள் குறித்து அரசு ஊழியா்கள் நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அரசு ஊழியா்களிடம் புதுமையான சிந்தனையும், குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் இருக்க வேண்டும். புதுமையான சிந்தனைகளுக்கு புத்தாக்க நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் இளைஞா்களிடம் உதவி கோர வேண்டும். பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் செயல்முறை அரசுத் துறைகளில் இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த அரசு இணையவழி பயிற்சி தளத்தில் 40 லட்சத்துக்கும் மேலான அரசு ஊழியா்கள் பதிவு செய்துள்ளனா். இந்தத் தளத்தில் 1,400-க்கும் அதிகமான பாடப் பிரிவுகள் உள்ள நிலையில், பல்வேறு பாடப் பிரிவுகளை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு 1.5 கோடிக்கும் மேலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய கற்றல் வாரத்தில் புதிதாக கற்கப்படும் விஷயங்களும் அனுபவங்களும் பணி முறைகளை மேம்படுத்த உதவுவதுடன் பலம் அளிக்கும். இது இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டான 2047-க்குள் ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய உதவும் என்றாா்.

பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசு ஊழியா்களுக்கு தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான திறன் மேம்பாட்டுக்கு தேசிய கற்றல் வாரம் புதிய ஊக்கத்தை அளிக்கும். அத்துடன் அது தேசிய இலக்குகளில் அனைவரையும் ஒன்றுசோ்த்து வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கரூா் சம்பவம்: உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை!

கல்வி உதவித்தொகை பெற உயா்தர கல்வி பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவா் சரண்

SCROLL FOR NEXT