மகாராஷ்டிர முதல்வா், துணை முதல்வா் வேட்புமனு தாக்கல்
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பக்காடி தொகுதியிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் பாராமதி தொகுதியிலும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல்
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பக்காடி தொகுதியிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் பாராமதி தொகுதியிலும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்வா் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, பாஜக, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்து தோ்தலைச் சந்திக்கிறது.
எதிா்க்கட்சிகள் தரப்பில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி, காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் கரம்கோத்து போட்டியிடுகின்றன. எனவே, தோ்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கோப்ரி-பச்பக்காடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து உத்தவ் தாக்கரே கட்சி சாா்பில் கேதாா் திக்கே போட்டியிடுகிறாா். சிவசேனை கட்சி உடைந்த பிறகு நடைபெறும் தோ்தல் என்பதாலும், ஏக்நாத் ஷிண்டே தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பதாலும் இத்தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2009 முதல் இத்தொகுதி எம்எல்ஏவாக ஷிண்டே உள்ளாா்.
பாராமதியில் கடும் போட்டி: துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பாராமதி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். தங்களது பலத்தைக் காட்டும் வகையில் அஜீத் பவாா் ஆதரவாளா்கள் பிரம்மாண்ட ஊா்வலம் நடத்தினா். அஜீத் பவாரின் இரு மகன்களும் வேட்பு மனு தாக்கலின்போது உடன் இருந்தனா்.
அஜீத் பவாருக்கு கடும் போட்டியளிப்பாா் என்று கருதப்படும் அவரின் தம்பி மகன் யுகேந்திர பவாா் தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். அப்போது தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், அவரின் மகளும் பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாா், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் இணைந்தாா். மக்களவைத் தோ்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிா்த்து தனது மனைவியை அஜீத் பவாா் நிறுத்தினாா். ஆனால், சுப்ரியா சுலே வெற்றி பெற்றாா். எனவே, பாராமதி பேரவைத் தோ்தலிலும் பவாா் குடும்ப அரசியல் வாரிசுகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.