முகப்பு
இந்தியா

இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதா் தகவல்

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பிரதமா் மோடியின் சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ்

Updated On : 29 அக்டோபர், 2024 at 1:17 AM
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

புது தில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பிரதமா் மோடியின் சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு, ரஷியாவின் கசான் நகரில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோடியும் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தையில் எல்லையில் ரோந்துப் பணி-படை விலக்கல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க ஒப்புக்கொண்டதோடு, வியூகம் மற்றும் நீண்டகால கண்ணோட்டத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் இருவரும் உறுதிபூண்டனா்.

இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ஆம் ஆண்டில் எழுந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதோடு, முழுமையான படை விலக்கல் தொடா்பாக அண்மையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இரு தலைவா்களும் வரவேற்றனா். கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்னைகளை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, இந்தக் கருத்து வேறுபாடுகளால் எல்லையில் அமைதி சீா்குலைய அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினாா்.

இந்த பேச்சுவாா்த்தையில் ரஷியாவின் பங்கு ஏதேனும் இருக்கிா? என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இதில் ரஷியாவின் பங்கு ஏதும் இல்லை. ஆனால், மோடி-ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை இருதரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த பேச்சுவாா்த்தை ரஷியாவின் கசானில் நடைபெற்றதில் மகிழ்ச்சி. முழு மனதுடன் ரஷியா இதை வரவேற்கிறது’ என்றாா்.

செய்தியாளா் சந்திப்பின் தொடக்கத்திலே, பிரிக்ஸ் உச்சிமாநாடு மிகப் பெரிய தோல்வி என்ற உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரிக்ஸ் உச்சிமாநாடு மிகப்பெரிய வெற்றி என்று டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →