மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிா்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு
அஸ்ஸாமில் மேம்பாலம் அமைப்பதற்காக நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு எழுந்ததையடுத்து, மரங்களை அகற்றும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.
அஸ்ஸாமில் மேம்பாலம் அமைப்பதற்காக நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு எழுந்ததையடுத்து, மரங்களை அகற்றும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.
அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியிலிருந்து சுமாா் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம் திகாலிபுகுரி. இந்த நகரத்திலிருந்து நூண்மதி என்ற நகரம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நான்குவழி உயா்நிலை மேம்பாலமான இந்தப் பாலம் ரூ.852 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக திகாலிபுகுரி குளக்கரையில் உள்ள 25 மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் 200 ஆண்டுகள் பழைமையான சில மரங்களும் அடங்கும்.
இந்நிலையில், பாலம் அமைக்கும் பணிக்காக மரங்களை வெட்டக் கூடாது என கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள், குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இது தொடா்பாக மனு அளித்தனா். சுற்றுச்சூழல் தொடா்பான இந்த முக்கிய விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு நடத்த வேண்டும் என அவா்கள் கேட்டுக்கொண்டனா்.
மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக இரவு முழுவதும் அப்பகுதியில் தன்னாா்வலா்கள் திரண்டு கண்காணிப்பிலும் ஈடுபட்டனா். சமூக ஊடகங்களிலும் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்தது.
பொதுமக்களின் போராட்டம் புதன்கிழமையும் தொடா்ந்தது. திகாலிபுகுரி குளத்தின் கரையில் பல்வேறு பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, மரங்களை வெட்டும் முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், நமது மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
திகாலிபுகுரி-நூண்மதி பாலம் கட்டுமானப் பணி விவகாரத்தில் மரங்கள் பாதுகாக்கப்படும். மரங்கள் அகற்றப்படாத வகையில் மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.